ஆண் குழந்தையை மட்டுமே பெற்றெடுக்க வேண்டும் என்று கூறுவது ஒழுக்கக்கேடான செயல்- கேரள ஐகோர்ட்
- கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்தார்.
- பெண் குழந்தைகள் தாழ்ந்தவர்கள் என்ற கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, மூவாட்டுப்புழா பகுதியை சேர்ந்த ஒருவருடன் 2012-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அந்த பெண்ணை ஆண் குழந்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று திருமணம் நடந்த நாளிலேயே கணவரின் குடும்பத்தினர் கூறியிருக்கின்றனர்.
மேலும் ஆண் குழந்தை பிறக்க கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்று கூறி திருமணம் நடந்த நாளில் இருந்தே அந்த பெண்ணை, கணவரின் தாய் துன்புறுத்தியபடி இருந்துள்ளார். ஆனால் அந்த பெண்ணுக்கு 2014-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்ததது.
இதனால் அந்த பெண்ணிடம் கணவரின் குடும்பத்தினர் துன்புறுத்துவது போன்றே நடந்துள்ளனர். ஆனவே ஆண் குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என்று கூறி தனது மாமியார் துன்புறுத்தியதாக அந்த பெண், கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மேலும் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் அந்த பெண்ணின் மனு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தேவன் ராமச்சந்திரன், ஆண் குழந்தையை பிரத்யேகமாக பெற்றெடுக்க வேண்டும் என்று ஒரு பெண்ணை கோருவது ஒழுக்கக் கேடானது என்று கருத்து தெரிவித்தார்.
மேலும் பெண் குழந்தைகள் தாழ்ந்தவர்கள் என்ற கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பெண்கள் தான் பூமிக்கு உயிர் கொடுக்கிறார்கள் என்று கூறிய அவர், சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் எதிர்மனுக்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.