இந்தியா

விருப்பம் இல்லாத நோயாளிகளை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கக்கூடாது: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Published On 2024-01-03 03:54 GMT   |   Update On 2024-01-03 03:54 GMT
  • தீராத நோயால் பாதிக்கப்பட்டு, மேற்கொண்டு சிகிச்சைக்கான வாய்ப்பு இல்லாதவர்கள், சிகிச்சை அளித்தாலும் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லாதவர்கள் ஆகியோரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கக்கூடாது.
  • தீவிர சிகிச்சை பிரிவில் சேர காத்திருக்கும் நோயாளிகளுக்கு ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, இதய துடிப்பு, ஆக்சிஜன் அளவு, சுவாச நிலவரம், நரம்பியல் நிலவரம் பரிசோதிக்க வேண்டும்.

புதுடெல்லி:

ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யு.) நோயாளிகளை சேர்ப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அவற்றை 24 நிபுணர்கள் தொகுத்துள்ளனர்.

அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஒரு நோயாளிக்கு உறுப்புகள் செயல் இழந்தாலோ அல்லது அவருக்கு மாற்று உறுப்பு தேவைப்பட்டாலோ அல்லது அவரது உடல்நிலை மேலும் மோசமடையும் நிலை இருந்தாலோ அவரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கலாம்.

சுவாச கருவிகளின் உதவி தேவைப்பட்டாலோ அல்லது டாக்டர்களின் தொடர் கண்காணிப்பு தேவைப்படும் அளவுக்கு கடுமையான நோயாக இருந்தாலோ அத்தகைய நோயாளியையும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கலாம்.

இதய அறுவை சிகிச்சை செய்தவர்கள், வேறு பெரிய அறுவை சிகிச்சையை மேற்கொண்டவர்கள், சுவாசிப்பதில் சிக்கல் இருப்பவர்கள் ஆகியோரையும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கலாம்.

ஆனால், நோயாளியோ அல்லது அவருடைய குடும்பத்தினரோ தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்க மறுப்பு தெரிவித்தால், அத்தகைய நோயாளியை அப்பிரிவில் சேர்க்கக்கூடாது.

தீராத நோயால் பாதிக்கப்பட்டு, மேற்கொண்டு சிகிச்சைக்கான வாய்ப்பு இல்லாதவர்கள், சிகிச்சை அளித்தாலும் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லாதவர்கள் ஆகியோரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கக்கூடாது.

பேரிடரால் பாதிக்கப்பட்ட இடங்களில் படுக்கை, ஆக்சிஜன் உள்ளிட்ட கட்டமைப்புகள் குறைவாக இருக்கும் நிலையில், அத்தகைய நோயாளிகளை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கக்கூடாது.

தீவிர சிகிச்சை பிரிவில் சேர காத்திருக்கும் நோயாளிகளுக்கு ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, இதய துடிப்பு, ஆக்சிஜன் அளவு, சுவாச நிலவரம், நரம்பியல் நிலவரம் ஆகியவற்றை பரிசோதிக்க வேண்டும்.

நோயாளியின் நோய் நிலவரம் சீராகிவிட்டால், குடும்பத்தினரும் ஒப்புக்கொண்டால், அவரை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து 'டிஸ்சார்ஜ்' செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News