பாஜக-வில் இணைகிறாரா?- சம்பாய் சோரன் சொல்வது என்ன...
- அமலாக்கத்துறையால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதால் சம்பாய் சோரன் முதல்வராக பதவி ஏற்றார்.
- பிப்ரவரி 2-ந்தேதி முதல் ஜூலை 3-ந்தேதி வரை ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருந்தார்.
ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன். நில மோசடி வழக்கில் ஹேமந்த் சோரன் வலுக்கட்டாயமாக முதல்வர் பதவியை ஜனவரி 31-ந்தேதி ராஜினாமா செய்தார். அதன்பின் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
இதனால் சம்பாய் சோரன் முதல்வராக பதவி ஏற்றார். பின்னர் ஜூன் 28-ந்தேதி ஹேமந்த் சோரன் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதனால் ஜூலை 4-ந்தேதி ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.
பிப்ரவரி 2 முதல் ஜூலை 3-ந்தேதி வரை மட்டுமே சம்பாய் சோரன் முதல்வராக இருந்தார். தற்போது ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் நீர்வளத்துறை மந்திரியாக உள்ளார். கல்வி உள்ளிட்ட முக்கியமான துறைகள் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில்தான் சம்பாய் சோரன் பாஜக-வில் இணையப்போவதாக வதந்திகள் பரவத்தொடங்கியது. இது தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு சம்பாய் சோரன் பதில் அளித்து கூறியதாவது:-
என்ன வகையிலான வதந்திகள் பரவிக் கொண்டிருக்கிறது என்பது பற்றி எனக்கு ஏதும் தெரியாது. என்ன விதமான செய்திகள் பரவிக் கொண்டிருக்கிறது என்பது எனக்குத் தெரியாதால் அது சரியா? தவறா? என என்னால் கூற இயலாது. எனக்கு அதுப்பற்றி ஏதும் தெரியாது. நான் இங்கே (ஹேமந்த் சோரன் கட்சி) மட்டுமே இருக்கிறேன்.
இவ்வாற சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.
சம்பாய் சோரன் செய்த தவறு என்ன?- கேள்வி எழுப்பிய பாஜக
சம்பாய் சோரன் மிகப்பெரிய ஆளுமை. அவருடைய பணியால் ஜார்க்கண்ட்டின் 3.5 கோடி மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால், முதல்வர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்ட விதம் துரதிருஷ்டவசமானது. நல்ல நபர் முதல்வர் பதவியில் இருந்து விலக்கப்படுவது பின்னடைவாகும். அவர் செய்த தவறு என்ன? என பாஜக எம்.பி. தீபக் பிரகாஷ் தெரிவித்தார்.
மேலும், சம்பாய் சோரனை கட்சியில் சேர்ப்பது மத்திய தலைவர்களை சார்ந்தது என்றார்.