மோடிக்கு தெரிந்துதான் செபி தலைவர் சீன நிறுவனங்களில் முதலீடு செய்கிறாரா? - காங்கிரஸ் கேள்வி
- கடந்த 2018 - 19ம் நிதியாண்டில், மொத்தம் 19.54 கோடி ரூபாய்க்கு பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார்.
- இயற்கையான முறையில் பிறக்காத பிரதமருக்கு நாங்கள் எழுப்பும் கேள்விகள் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
அதானி குழுமத்தின் முறைகேடுகள் தொடர்பாக கடந்த 2023 ஜனவரி 24 இல் ஹிண்டன்பெர்க் வெளியிட்ட அறிக்கை மீது இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதானி குழும முறைகேடு புகாா் தொடா்புடைய நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில் செபியின் தலைவரும், அவரது கணவரும் பங்குகளை வைத்திருப்பதால் அக்குழுமத்துக்கு எதிரான விசாரணையில் செபி ஈடுபடவில்லை என்று கடந்த ஆகஸ்ட் 10 ஆம் ஹிண்டன்பா்க் மற்றொரு குற்றச்சாட்டை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியது.
இந்த குற்றச்சாட்டுக்கு செபி தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அதானி குழுமம் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. இவை அனைத்தும் உள்நோக்கம் கொண்டவை என்று மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் இருவரும் இணைத்தும் தற்போது மற்றொரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் செபி மாதபியின் மீது காங்கிரஸ் தொடர்ந்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பாஜக அரசு மவுனம் காப்பது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது.
செபி தலைவர் சீன நிறுவனங்களில் முதலீடு செய்கிறார் என்ற புதிய குற்றச்சாட்டைக் காங்கிரஸ் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த விஷயம் பிரதமர் மோடிக்கு தெரியுமா என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
இயற்கையான முறையில் பிறக்காத பிரதமருக்கு நாங்கள் எழுப்பும் கேள்விகள் என்று தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ள மாநிலங்களவை காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் ,
பட்டியலிடப்பட்ட பத்திரங்களில் செபி தலைவர் மாதபி பூரி புச் வணிகம் செய்துள்ளார். இந்தியாவிற்கு வெளியே அதிக மதிப்புள்ள முதலீடுகளை செய்துள்ளார். எல்லைப்பகுதியில் இந்தியா சீனா இடையே மோதல் போக்கு தீவிரமடைந்து வரும் சூழலில் செபி தலைவரோ, சீன நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார். இந்த விஷயம் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தெரியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா, செபி தலைவர் கடந்த 2018 - 19ம் நிதியாண்டில், மொத்தம் 19.54 கோடி ரூபாய்க்கு பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். உள்நாடு மட்டுமின்றி சீனா உட்பட பல வெளிநாட்டு நிதி திட்டங்களிலும் முதலீடு செய்துள்ளார் என்று குற்றம் சாட்டினார்.