ககன்யான் திட்ட ராக்கெட்டின் முதல் சோதனை டிசம்பர் மாதம் நடைபெறும்- இஸ்ரோ தலைவர்
- எஸ்.எஸ்.எல்.வி-டி 3 ராக்கெட் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதை அடுத்து இனி வணிகரீதியாக செயல்படுத்தப்படும்.
- தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான இடத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டா:
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பூமி கண்காணிப்பு இ.ஓ.எஸ். 08 என்ற செயற்கைகோளை எஸ்.எஸ்.எல்.வி- 3டி ராக்கெட் திட்டமிட்ட இலக்கில் நிலை நிறுத்தியது. இதனைத் தொடர்ந்து இஸ்ரோ தலைவர் சோமநாத் நிருபர்களிடம் கூறியதாவது:-
எஸ்.எஸ்.எல்.வி-டி 3 ராக்கெட் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதை அடுத்து இனி வணிகரீதியாக செயல்படுத்தப்படும். பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளுக்கு இதுவரை தேவையான உதிரி பாகங்களை தனியாரிடம் பெற்று வந்தோம். தொழில்துறையை மேலும் மேம்படுத்துவதற்காக இனி ராக்கெட் தொழில் நுட்பத்தை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொழில்நுட்பம் பரிமாற்றம் தொடர்பாக பல நிறுவனங்களிடம் கருத்து கேட்கப்பட்டது. எதிர்பார்த்த படி பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டினர். அதில் தகுதியான நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுடன் தொழில்நுட்ப பரிமாற்றம் நடைபெறும்.
தனியார் நிறுவனங்களின் வணிக ரீதியான செயற்கைகோள்கள் இனி இஸ்ரோவின் கீழ் செயல்படும் என்.எஸ்.ஐ.எல். நிறுவன மூலம் ஏவப்படும். உள்நாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த தொழில்நுட்பம் வழங்கப்படும்.
எஸ்.எஸ்.எல்.வி- டி3 ராக்கெட் செலுத்தப்பட்ட செயற்கைகோள்கள் விண்வெளியில் புற ஊதா கதிர்கள், காமா கதிர்கள் விண்வெளியில் எப்படி இருக்கிறது? என்பதை கண்டறிந்து தகவல் தெரிவிக்கும். இது ககன்யான் திட்டத்திற்கு உதவியாக இருக்கும்.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும். அதற்கு முன்னதாக ஆளில்லா முதல் சோதனை ராக்கெட் திட்டம் வருகிற டிசம்பரில் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்திற்கான ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு வந்துள்ளது. அதற்கான ஒருங்கிணைப்பு பணிகள் அடுத்த சில மாதங்களில் முடிக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான இடத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. அடுத்த 2 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும்.
தெற்கு திசைக்கு அனுப்ப வேண்டிய செயற்கைகோள்கள் அனைத்தும் குலசேகரப்பட்டினத்தில் இருந்து அனுப்புவது தான் நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது விஞ்ஞானிகள் ராஜராஜன், நாராயணன், சங்கரன், வினோத், அவினாஷ் உள்பட பலர் இருந்தனர்.