அயோத்தியில் ஸ்ரீஇராமர் கோவில் கட்டப்படுவது நமது பாக்கியம்: பிரதமர் மோடி
- டெல்லி ராம் லீலா மைதானத்தில் தசரா விழா கொண்டாடப்படும்
- பல தசாப்தங்கள் நாம் பொறுமையுடன் காத்திருந்தோம் என மோடி கூறினார்
நாடு முழுவதும் தசரா பண்டிகையின் கடைசி நாள் பண்டிகையான விஜயதசமி இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இந்திய தலைநகர் புது டெல்லியில் "ஸ்ரீ ராம்லீலா சொசைட்டி" எனும் பெயரில், இந்துக்களின் கடவுளான ஸ்ரீராமபக்தர்களின் சங்கம் உள்ளது. இவர்கள் வருடாவருடம் துவாரகா செக்டார் 10 பகுதியில் "தசரா" எனப்படும் நவராத்திரி பண்டிகையின் கடைசி நாளான விஜயதசமியன்று, ராம் லீலா மைதானத்தில், ராம்லீலா உற்சவத்தை நடத்தி வருகின்றனர். இதில் "ராவண தகனம்" எனும் நிகழ்வில் ராவணணின் மிக பெரிய உருவ பொம்மை எரிக்கப்படும்.
இந்த நிகழ்வை காண ஏராளமான இந்துக்கள் பல மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வருகை தருவார்கள்.
இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பொதுமக்களிடையே அவர் உரையாற்றினார்.
அதில் அவர் தெரிவித்ததாவது:
நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது விஜயதசமி வாழ்த்துக்கள். இந்த திருவிழா நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான போரையும், இறுதியில் தீமையை நன்மை வெல்வதையும் குறிக்கும் விழாவாகும். ஸ்ரீராமஜென்ம பூமியான அயோத்தியில் பகவான் ஸ்ரீராமருக்கு மிக பெரிய அளவில் சிறப்பான கோவில் கட்டப்படுவதை காண நாம் பல தசாப்தங்கள் காத்திருந்தோம். தற்போது அங்கு கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதை காண நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்; நாம் பாக்கியசாலிகள். நமது பொறுமைக்கும் அதனால் கிடைத்த வெற்றிக்கும் இது ஒரு சான்று. அங்கு பகவான் ஸ்ரீராமரின் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட இன்னும் சில மாதங்களே உள்ளன. இன்றைய "ராவண தகனம்" நம் நாட்டை பிரிக்க நினைக்கும் சக்திகளை எரிப்பதையும் குறிப்பதாகும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.