பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே பகவான் ராமரின் விருப்பம்- யோகி ஆதித்யநாத்
- காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு ஊழல் வரலாறு உண்டு.
- பாரபங்கி மக்களவைத் தொகுதிக்கு ஐந்தாம் கட்டமாக மே 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சி அமைப்பார் என்றும் கடவுள் ராமர் கூட தனது "தீவிர பக்தன்" வெற்றி பெற விரும்புகிறார் என்று அவர் கூறினார்.
நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், "மோடி அலை தற்போது சுனாமியாக மாறியுள்ளது" என்று இங்குள்ள ஹைதர்கரில் பாஜக வேட்பாளர் ராஜ்ராணி ராவத்தை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பேரணியில் யோகி ஆதித்யநாத் கூறினார்.
அப்போது யோகி ஆதித்யநாத் மேலும் கூறியதாவது:-
பிரதமர் மோடியின் தலைமையில், சாதி, சமூகம் என்ற வேறுபாடின்றி அனைவரும் வளர்ச்சித் திட்டங்களால் பயனடைந்துள்ளோம்.
எங்கள் அன்புக்குரிய பகவான் ராமரும் தனது தீவிர பக்தர் (பிரதமர் மோடி) மீண்டும் நாட்டின் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு ஊழல் வரலாறு உண்டு. இவர்கள் பெரிய கூற்றுக்களை கூறுகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால், அவர்கள் காலத்தில் மக்கள் பசியால் இறந்தனர், விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர், இளைஞர்கள் இடம்பெயர்ந்தனர்.
ஆனால், பிரதமர் மோடியின் தலைமையில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றத்திற்கு நாம் அனைவரும் சாட்சிகள். கடந்த 4 ஆண்டுகளாக 80 கோடி பேர் இலவச ரேஷன், 12 கோடி விவசாயிகள் கிசான் சம்மான் நிதி மூலம் பலன் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாரபங்கி மக்களவைத் தொகுதிக்கு ஐந்தாம் கட்டமாக மே 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.