பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் தீர்மானம்
- காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மாநிலங்களவை தலைவருக்கு கடிதம் எழுதினார்.
- அனைத்து விதிமுறைகளையும் பிரதமர் மோடி மீறிவிட்டார் என தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது:
பிரதமரின் உரிமை மீறல் மற்றும் சபையை அவமதிக்கும் ஒரு விஷயத்தை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
கடந்த 2-ம் தேதி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் மோடி அளித்த பதிலுரையின் போது, '2014-ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது மாநிலங்களவையில் எங்கள் பலம் குறைவாக இருந்தது. அவைத்தலைவர் எதிர்ப்புறத்திற்கு ஆதரவாக இருந்தது' என்றார். பிரதமரின் இந்த விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. ஹமீத் அன்சாரியை பிரதமர் விமர்சிப்பது இது முதல் முறை அல்ல.
பிரதமர் மோடி செய்ததைப் போல் வேறு எந்தப் பிரதமரும் மக்களவை சபாநாயகரையோ, மாநிலங்களவை அவைத்தலைவரையோ விமர்சித்துப் பேசியது இல்லை.
அனைத்து விதிமுறைகளையும் பிரதமர் மீறிவிட்டார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என கோருகிறேன் என தெரிவித்துள்ளார்.