ஜம்மு காஷ்மீர் அமைச்சரவையில் பங்கேற்கவில்லை.. காங்கிரஸ் எடுத்த முடிவு - காரணம் இதுதான்
- ஸ்ரீநகரில் நடக்கும் பதவியேற்பு நிகழ்ச்சியில் உமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.
- பிரதமரும் பொதுக் கூட்டங்கள்தோறும் அதற்கான வாக்குறுதியை அளித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 8 ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில் பெரும்பான்மை இடங்களைப் பிடித்து தேசிய மாநாடு [என்சிபி] மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. தேசிய மாநாடு கட்சி 42 இடங்களிலும் , காங்கிரஸ் 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதற்கிடையே 4 சுயேட்சைகள் மற்றும் 1 இடத்தில் வென்ற ஆம் ஆத்மி என்சிபி கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஜனாதிபதி ஆட்சி திரும்பப்பெறப்பட்டு உமர் அப்துல்லா தலைமையிலான என்சிபி அரசு இன்றைய தினம் ஆட்சியமைத்துள்ளது.
ஸ்ரீநகரில் நடக்கும் பதவியேற்பு நிகழ்ச்சியில் உமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் முதல்வராகப் பதவியேற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து மற்ற அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் என்சிபியுடன் கூட்டணி வைத்த காங்கிரஸ் தற்போதைக்கு பங்கேற்கப்போவதில்லை என்றும் வெளியிலிருந்தே ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஹமீத், இப்போதைக்கு ஜம்மு காஷ்மீர் அரசின் அமைச்சரவையில் காங்கிரஸ் பங்குகொள்ளப்போவதில்லை. ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தைத் திரும்ப அளிக்கவேண்டும் என்று நாங்கள் மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
பிரதமரும் பொதுக் கூட்டங்கள்தோறும் அதற்கான வாக்குறுதியை அளித்துள்ளார். ஆனால் இன்னும் மாநில அந்தஸ்து கொடுக்கப்படவில்லை. அதனால் நாங்கள் அதிருப்தியில் உள்ளோம். எனவே இப்போதைக்கு அமைச்சரவையில் பங்கேற்கவில்லை. மாநில அந்தஸ்தை மீட்பதற்கான காங்கிரசின் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.