ஜம்மு-காஷ்மீரில் தேர்தலை சீர்குலைக்க முடியும் என எந்த சக்திகள் நினைத்தாலும்... தலைமை தேர்தல் ஆணையர் சொல்வது என்ன?
- அடித்தளம் மக்கள் மற்றும் நிர்வாகத்தால் போடப்பட்டது.
- தற்போது வலுவான கட்டடம் கட்டுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறது.
vஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்து ஆராயப்பட்டது. அப்போது பயங்கரவாத தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் என்கவுண்டர் நடவடிக்கை அதிகரித்துள்ள நிலையில் சட்டமன்ற தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு தலைமை தேர்தல் அதிகாரி ராஜிவ் குமார் கூறியதாவது:-
அடித்தளம் மக்கள் மற்றும் நிர்வாகத்தால் போடப்பட்டுள்ளது. தற்போது வலுவான கட்டடம் கட்டுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறது. நாம் புதிய உச்சத்தை எட்டுவோம். அதற்கான நேரம் இது. ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் தலையிட முடியும், சீர்குலைக்க முடியும் என எந்த உள்நாட்டு அல்லது வெளிநாட்டு சக்திகள் நினைத்தாலும், அது அவர்களின் தவறு. சீர்குலைக்கும் சக்திகளுக்கு ஜம்மு-காஷ்மீர் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
தேர்தலை சீர்குலைக்க எதற்கும் இடமளிக்கப்படமாட்டோம் என்பதில் முழு அர்ப்பணிப்புடனும் உறுதியுடனும் செயல்பட்டு வருகிறோம். நாங்கள் அதை செய்யாவிட்டால், அது கோழி- முட்டை நிலை (கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா?) ஆகிவிடும். நாம் தேர்தலை பற்றி பேசும்போதெல்லாம், இதுபோன்ற செயல்கள் அதிகரிக்கும். நாம் வலுக்கட்டாயமாக பின்நோக்கி செல்ல வேண்டியிருக்கும். இது சண்டையிடாமல் தோல்வியை ஒப்புக்கொண்டதாகிவிடும். இது நடக்காது.
தேர்தலை இதுபோன்ற சம்பவங்கள் பாதிக்காது. நமது படைகள், நிர்வாகம் எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டது, ஜனநாயக கொடி பறந்து கொண்டிருக்கிறது. பறந்து கொண்டிருக்கும்.
இவ்வாறு ராஜிவ் குமார் தெரிவித்தார்.
செப்டம்பர் 30-ந்தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.