இந்தியா

ஜார்க்கண்ட் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு- ஹேமந்த் சோரன் அரசு வெற்றி

Published On 2022-09-05 08:06 GMT   |   Update On 2022-09-05 08:06 GMT
  • ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், முதல்-மந்திரியுமான ஹேமந்த் சோரன் தனது பதவியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு
  • ஐக்கிய முற்போக்கு கூட்டணி எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா தனது பக்கம் இழுத்து ஆட்சியை கவிழ்க்க கூடும் என தகவல் வெளியானது.

ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், முதல்-மந்திரியுமான ஹேமந்த் சோரன் தனது பதவியை முறைகேடாக பயன்படுத்தி ராஞ்சியில் உள்ள சுரங்கத்தை சட்டவிரோதமாக குத்தகைக்கு எடுத்து ஆதாயம் அடைந்ததாக பா.ஜனதா குற்றம் சாட்டியது. அதோடு அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டது.

எனவே ஹேமந்த் சோரன் எம்.எல்.ஏ. பதவியை தகுதி நீக்கம் செய்யக் கோரி தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா முறையிட்து. இதையேற்று முதல்-மந்திரியின் எம்.எல்.ஏ. பதவியை தகுதி நீக்கம் செய்யுமாறு ஜார்க்கண்ட் கவர்னர் ரமேஷ் பைசுக்கு தேர்தல் கமிஷன் கடந்த மாதம் 25-ந்தேதி பரிந்துரை செய்தது. ஆனால் கவர்னர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா தனது பக்கம் இழுத்து ஆட்சியை கவிழ்க்க கூடும் என தகவல் வெளியானது.

இதனால் ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் சுமார் 30 பேர் காங்கிரஸ் ஆளும் சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூருக்கு தனி விமானத்தில் கடந்த 30-ந்தேதி அழைத்து செல்லப்பட்டனர். அங்குள்ள நவ ராய்ப்பூர் சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டனர்.

இதற்கிடையே ஜார்க் கண்ட் சட்டசபையில் சிறப்பு கூட்டத்தை இன்று கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டுவர இருப்பதாக முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் தெரிவித்து இருந்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பை யொட்டி சத்தீஷ்கரில் முகாமிட்டு இருந்த 30 எம்.எல்.ஏ.க்கள் ராய்ப்பூரில் இருந்து நேற்று மாலை தனி விமானத்தில் ராஞ்சி வந்தடைந்தனர்.

இந்த நிலையில் ஜார்க்காண்ட் சட்டசபையில் சிறப்பு கூட்டம் இன்று காலை தொடங்கியது. முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார்.

தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பா.ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக அவர் குற்றம் சாட்டினார். தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. அதன்பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபையில் தீர்மானத்திற்கு ஆதரவாக 48 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தனர். பாஜக வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் சோரன் அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

Tags:    

Similar News