இந்தியா

பா.ஜனதா ஆட்சியில் இதுவரை 9 லட்சம் பேருக்கு அரசு வேலை: மத்திய மந்திரி தகவல்

Published On 2023-06-20 03:40 GMT   |   Update On 2023-06-20 03:40 GMT
  • காங்கிரஸ் ஆட்சியில் 2004 முதல் 2014 வரை 6 லட்சத்து 2 ஆயிரத்து 45 அரசு வேலைகள் மட்டுமே வழங்கப்பட்டது.
  • அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு பா.ஜனதா ஆட்சியிலேயே அதிகம் அளிக்கப்பட்டது

புதுடெல்லி :

பா.ஜனதா ஆட்சியில் இதுவரை 9 லட்சம் அரசு வேலைகள் வழங்கப்பட்டு இருப்பதாக மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். அணுசக்தி, விண்வெளி மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறும்போது, கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 2004 முதல் 2014 வரை 6 லட்சத்து 2 ஆயிரத்து 45 அரசு வேலைகள் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், தற்போது பா.ஜனதாவின் 9 ஆண்டுகால ஆட்சியில் 8 லட்சத்து 82 ஆயிரத்து 191 அரசு வேலைகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். அதிலும், பிரதமர் மோடியின் 6 வேலைவாய்ப்பு முகாம்களிலும் (ரோஜ்கர் மேளா) தலா 70 ஆயிரம் நியமன கடிதங்கள் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 45 ஆயிரத்து 431 பேர் தேர்வு பெற்றனர் என்றும், பா.ஜனதா ஆட்சியில் 50 ஆயிரத்து 906 பேர் நியமனம் பெற்றனர் என்றும் கூறினார். அதாவது, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் பா.ஜனதா ஆட்சியில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு பெற்றதாகவும் தெரிவித்தார். இதைபோல அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வும் பா.ஜனதா ஆட்சியிலேயே அதிகம் அளிக்கப்பட்டது என்றும் மந்திரி கூறினார்.

Tags:    

Similar News