அமர்நாத் யாத்திரை: பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஜம்மு காஷ்மீர் கவர்னர்
- கடந்த ஆண்டு நடந்த புனித யாத்திரையில் 4.5 லட்சம் யாத்ரீகர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- அமர்நாத் யாத்திரையில் பங்கேற்க நாடுமுழுவதிலும் இருந்து பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
ஸ்ரீநகர்:
தெற்கு காஷ்மீரின் இமயமலை பகுதியில் 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகை கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் பனி உறைந்து சிவலிங்க வடிவத்தில் காட்சி தரும். இயற்கையாக உருவாகும் இந்த பனிலிங்கத்தை தரிசிக்க ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம்.
கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31 வரை என மொத்தம் 62 நாட்கள் நடைபெற்ற புனித யாத்திரையில் 4.5 லட்சம் யாத்ரீகர்கள் பனியால் உருவான சிவலிங்கத்தை தரிசனம் செய்தனர்.
இதற்கிடையே, இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 29-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான முன்பதிவு கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது. நாடு முழுவதுமிருந்து ஏராளமான சாதுக்கள் ஜம்முவில் குவிய தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் பக்தர்களின் வசதிக்காக திறக்கப்பட்ட பால்டால் முகாமை கவர்னர் மனோஜ் சின்ஹா இன்று பார்வையிட்டார். அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.