இந்தியா

அமர்நாத் யாத்திரைக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் தேர்தல்: அமித் ஷா முக்கிய ஆலோசனை நடத்தியதாக தகவல்

Published On 2024-07-05 07:56 GMT   |   Update On 2024-07-05 07:56 GMT
  • சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளரை கட்சி முன்னிறுத்தாது என்றும் அக்கட்சியின் தலைமை மாநில தலைவர்களுக்கு தெரிவித்துள்ளது.
  • வரும் நாட்களில் மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவர்கள் ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான பாஜக தேசிய தலைமை, ஜம்மு-காஷ்மீர் மாநில பாஜக தலைவர்களை சட்டசபை தேர்தலுக்கு தயாராகுமாறு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது நடைபெற்று வரும் அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 19-ந்தேதியுடன் நிறைவடைய உள்ளது. அமர்நாத் யாத்திரைக்கு பிறகு ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதார அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான ஜே.பி. நட்டா தலைமையில் நேற்றிரவு ஆலோசனை நடைபெற்றது. அப்போது ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கு தயாராகுமாறு மாநில தலைவர்களுக்கு பாஜக தேசிய தலைமை அறிவுறுத்தி உள்ளதாக இந்தியா டூடே செய்தி வெளியிட்டுள்ளது.

90 தொகுதிகளிலும் பாஜக போட்டியிடும் என்றும் மாநிலத்தில் எந்த கட்சியுடனும் பாஜக தேர்தலுக்கு முன் கூட்டணி வைக்காது என்றும் சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளரை கட்சி முன்னிறுத்தாது என்றும் அக்கட்சியின் தலைமை மாநில தலைவர்களுக்கு தெரிவித்துள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ஆகஸ்ட் 2019-ல் ரத்து செய்யப்படுவதற்கு முன்னதாக 2018 நவம்பரில் மாநில அரசு கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி நடைபெற்று வந்தது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

வரும் நாட்களில் மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவர்கள் ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ளனர். மாநிலத்தில் உள்ள மக்களுடன் தொடர்பு கொள்ளக் கூடிய மிகப்பெரிய அளவிலான நிகழ்ச்சிகளையும் தொடங்க உள்ளது என்றும் தெரிவித்தனர்.

இரண்டு மணி நேரம் நீடித்த இந்த கூட்டத்தில் ரெய்னா, ஜம்மு காஷ்மீர் கட்சியின் எம்.பி.க்கள் ஜிதேந்திர சிங் மற்றும் ஜுகல் கிஷோர் சர்மா மற்றும் பிற உயர் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பை நிராகரிக்க முடியாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செப்டம்பர் 30-ந்தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தல் சுமூகமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News