இந்தியா

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா - பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2024-08-18 03:56 GMT   |   Update On 2024-08-18 03:57 GMT
  • முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழா காரணமாக போக்குவரத்து மாற்றம்.
  • நாணய வெளியீட்டு விழாவில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள், பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.

முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெறுகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற இருக்கிறது.

இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிட உள்ளார். இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெற்றுக் கொள்கிறார். இந்த விழாவில் பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பிரபலங்கள் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.

இந்த விழாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தயில், "கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் புகழ்மிக்க தலைவர்களில் ஒருவரான கருணாநிதியின் நூற்றாண்டு நினைவாக நடைபெறும் இந்நிகழ்ச்சி முக்கியமானது.

இந்திய அரசியல், இலக்கியம், சமுதாயத்தில் உயர்ந்த தலைவர்களில் ஒருவர் கருணாநிதி. தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும், இந்தியாவின் வளர்ச்சியிலும் எப்போதும் ஆர்வம் கொண்டவராக கருணாநிதி திகழ்ந்தார்.

அரசியல் தலைவராக முதலமைச்சராக கருணாநிதி நாட்டின் வரலாற்றில் அழியாத சுவடுகளை விட்டுச்சென்றுள்ளார். மக்களால் முதலமைச்சராக பல முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கருணாநிதி மக்கள், கொள்கை, அரசியலை மிகவும் நன்றாக புரிந்து வைத்திருந்தார்.

கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடப்பட உள்ள நிலையில் அவரின் நினைவுகளையும், அவரின் கொள்கைகளையும் நினைவுகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்நாளில் கருணாநிதிக்கு எனது இயதப்பூர்வமான மரியாதையை செலுத்துகிறேன்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News