இந்தியா

15 பேரை பலிகொண்ட ரெயில் விபத்து.. இது தான் காரணம்.. வெளியான அதிர்ச்சி தகவல்

Published On 2024-06-17 07:24 GMT   |   Update On 2024-06-17 08:42 GMT
  • ரெயில் விபத்துக்குள்ளான இடத்தில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
  • விபத்தில் பயணிகள் ரெயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன.

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த விரைவு ரெயில் மீது சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளான அதிர்ச்சி தகவல் இன்று காலை வெளியானது. இதில் முதலில் 5 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 15-ஆக அதிகரிப்பு. 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முழு வீச்சில் நடைபெற்று வரும் மீட்பு பணியில் தேசிய மீட்பு படையினர் மற்றும் உள்ளூர் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ரெயில் மோதிக்கொண்ட விபத்துக்கான காரணம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.



அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரெயில் நிலையத்தில் இருந்து கொல்கத்தா நோக்கி வந்து கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை 8 மணியளவில் விபத்துக்குள்ளானது. ரங்கபாணி ரெயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மீது பின்னால் வந்த சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பயணிகள் ரெயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன. டமார் என்ற சத்தத்துடன் ரெயில் பெட்டிகள் அதிர்ந்ததால் பயணிகள் அச்சத்தில் அலறினர். ரெயில் விபத்துக்குள்ளான இடத்தில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, சரக்கு ரெயில் சிக்னலில் நிற்காமல் வந்ததே இந்த விபத்திற்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வழித்தடத்தில் தானியங்கி சிக்னல்கள் உள்ளன. இரண்டு வழித்தடத்திலும் எப்போதும் ரெயில்கள் சென்று கொண்டிருக்கும் பரபரப்பான வழித்தடமாக இது உள்ளது. வடகிழக்கு இந்தியாவை நாட்டின் ஏனைய பகுதிகளை இந்த வழித்தடம் தான் இணைக்கிறது. தற்போது ரெயில் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் அவ்வழியாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News