மோடிஜி... உங்கள் கண் முன்னே உங்களுடைய ஊழல்: தேர்தல் பத்திரம் தீர்ப்பு குறித்து கபில் சிபல் கருத்து
- ரூ. 10 லட்சம் அல்லது ரூ. 15 லட்சத்திற்காக யாரும் தேர்தல் பத்திரம் கொடுக்கமாட்டார்கள்.
- அரசியல் கட்சிக்கு ரூ. 5000 கோடி நிதி அளித்திருந்தால் பணக்காரர்கள் மட்டுமே அதைச் செய்திருக்க முடியும் என்று நீங்கள் கற்பனை செய்யலாம்.
தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தேர்தல் பத்திரம் செல்லாது. பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் பத்திரம் வினியோகிப்பதை உடனடியான நிறுத்த வேண்டும்.
இதுதொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும். அவர்கள் மார்ச் 31-ந்தேதிக்குள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அரசியல் கட்சிக்கு செல்லும் நிதி பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவது அவசியம்.
கருப்பு பணத்தை ஒழிப்பது என்பதற்காக தகவல் அறியும் உரிமை சட்டத்தை மீறுவது நியாயம் அல்ல என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இந்த தீர்ப்பை பெரும்பாலான எதிர்க்கட்சிகள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். இந்த நிலையில் மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கபில் சிபல் கூறியதாவது:-
அரசியல் கட்சிகளுக்கும், நிதி அளிப்பவர்களுக்கும் இடையிலான பிணைப்பு குறித்து நாங்கள் அறிந்து கொள்வோம். அதேபோல், பிரதிபலன் (Quid pro quo) குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், ஒருவர் கூட இதுபோன்ற மிகப்பெரிய தொகையை பிரதிபலன் இல்லாமல் வழங்க மாட்டார்கள்.
10 லட்சம் அல்லது 15 லட்சத்திற்காக யாரும் தேர்தல் பத்திரம் கொடுக்கமாட்டார்கள். அது கோடிக்கணக்கில் இருக்கும். எனவே அரசியல் கட்சிக்கு 5000 கோடி நிதி அளித்திருந்தால் பணக்காரர்கள் மட்டுமே அதைச் செய்திருக்க முடியும். மேலும் அவர்கள் செயல்பாட்டில் சில சலுகைகளைப் பெற்றிருக்க வேண்டும் என்று கற்பனை செய்து கொள்ளலாம்.
பிரதமர் மோடி ஊழல் எங்கே? ஊழல் எங்கே? என கேட்கிறார். இப்போது மோடி ஜி, உங்கள் கண்முன் உங்களுடைய ஊழல், இந்த அரசாங்க ஊழல்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் பத்திரம் திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த காங்கிரஸ் தலைவர் ஜெயா தாகூர் "அரசியல் கட்சியின் நிதி தொடர்பான வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களின் நலனை இந்த தீர்ப்பு பாதுகாக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.