இந்தியா

சபரிமலைக்கு 8ஆயிரம் கிலோமீட்டர் பாத யாத்திரை வரும் 2 வாலிபர்கள்

Published On 2024-07-11 04:56 GMT   |   Update On 2024-07-11 04:56 GMT
  • ஒரு நாளைக்கு 25 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் தூரம் வரை நடக்க திட்டமிட்டு நடந்து வருகின்றனர்.
  • குஜராத்தில் உள்ள துவாரகா, பூரியில் உள்ள ஜெகந்நாதர் கோவில் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களுக்கு செல்லும் அவர்கள், தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்துக்கும் வருகிறார்கள்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் பிரசித்திபெற்ற ஆலயமாக திகழ்வது சபரிமலை ஐயப்பன் கோவில். இந்த கோவிலுக்கு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து வருவார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடக்கும் மாதாந்திர பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

சபரிமலைக்கு வெகு தூரம் பாதயாத்திரையாகவும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். இந்நிலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த 2 பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். கேரள மாநிலம் காசர்கோடு குட்லு பகுதியை சேர்ந்தவர்கள் சனத்குமார் நாயக், சம்பத்குமார் ஷெட்டி. சனத்குமார் நாயக் புகைப்பட கலைஞராகவும், சம்பத்குமார் குஷன் தொழிலாளியாகவும் வேலை பார்க்கின்றனர்.

ஐயப்ப பக்தர்களான இவர்கள் ஆண்டுதோறும் காசர்கோட்டில் இருந்து சபரிமலைக்கு பாத யாத்திரை செல்வது வழக்கம். இந்த முறை தங்களின் பாதயாத்திரை தூரத்தை அதிகரிக்க முடிவு செய்தனர். பத்ரிநாத்தில் இருந்து தங்களது பயணத்தை தொடங்க திட்டமிட்டனர். அதன்படி அவர்கள் கேரளாவில் இருந்து பத்ரிநாத்துக்கு சென்றனர்.

பின்பு அங்கிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இருமுடி கட்டி பாதயாத்திரையை தொடங்கினார்கள். அங்கிருந்து நடைபயணமாக அயோத்திக்கு சென்றார்கள். அவர்கள் வரும் வழியில் உள்ள மாநிலங்களில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு சென்றபடி தங்களின் பாத யாத்திரையை தொடருகிறார்கள்.

ஒரு நாளைக்கு 25 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் தூரம் வரை நடக்க திட்டமிட்டு நடந்து வருகின்றனர். இரவில் ஏதாவது ஒரு கோவிலில் தங்கும் வகையில் பயண திட்டத்தை வகுத்து, அதன்படி பாத யாத்திரையை தொடர்கின்றனர். குஜராத்தில் உள்ள துவாரகா, பூரியில் உள்ள ஜெகந்நாதர் கோவில் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களுக்கு செல்லும் அவர்கள், தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்துக்கும் வருகிறார்கள்.

அங்கிருந்து கேரளாவுக்கு பயணம் செய்கிறார்கள். மொத்தம் 7 மாதங்கள் நடைபயணத்தை தொடர உள்ளனர். மொத்தம் 8ஆயிரம் கிலோமீட்டரை கடந்து சபரிமலைக்கு வந்து சேருகிறார்கள். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்காக குட்லுவில் உள்ள ஐயப்பன் கோவிலில் மாலையணிந்து விரதம் இருந்து வந்த நிலையில் சனத்குமார், சம்பத்குமார் ஆகிய இருவரும் தற்போது பாதயாதத்திரையை தொடங்கியிருக்கின்றனர்.

Tags:    

Similar News