இந்தியா

கேரளாவில் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து: 150-க்கும் மேற்பட்டோர் காயம்

Published On 2024-10-29 02:00 GMT   |   Update On 2024-10-29 07:19 GMT
  • கோவில் திருவிழாவின்போது வாணவேடிக்கை நிகழ்ச்சிக்காக பட்டாசுகள் குவிக்கப்பட்டிருந்தது.
  • திடீரென பட்டாசு வெடித்து சிதறியதால் பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் அஞ்சுதம்பலம் பகுதியில் வீரராகவர் கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா மிகவும் பிரபலமாகும். இதில் காசர்கோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் கலந்துகொள்வார்கள். இந்த ஆண்டு திருவிழா நடந்து வந்தது. இதையடுத்து நேற்று இரவு பல்வேறு நிகழ்ச்சிகள் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

அதனை கண்டுகளிக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவில் வளாகத்தில் திரண்டிருந்தனர். கோவில் திருவிழாவை முன்னிட்டு நள்ளிரவு 12:30 மணியளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அப்போது பட்டாசுகள் மொத்தமாக வைக்கப்பட்டிருந்த பகுதியில் வெடித்து சிதறிய பட்டாசுகளில் இருந்து தெறித்த தீப்பொறிகள் விழுந்தன.

இதையடுத்து மொத்தமாக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அனைத்தும் ஒரே நேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இந்த வெடி விபத்தால் கடும் தீப்பிளம்பு ஏற்பட்டது. இதனால் கோவில் வளாகத்தில் திரண்டு நின்ற பக்தர்களின் மீது தீப்பிடித்தது.

இதையடுத்து கோவில் வளாகத்தில் திரண்டு நின்ற பக்தர்கள் அனைவரும் அலறியடித்தபடி நாலா புறமும் சிதறி ஓடினர். தீ விபத்தில் சிக்காமல் இருப்ப தற்காக ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த பயங்கர வெடி விபத்தில் 150-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்காயம் அடைந்தனர்.

அவர்கள் வெடிவிபத்து நடந்த இடத்தில் உடலில் பலத்த தீக்காயங்களுடன் ஆங்காங்கே சிதறிக் கிடந்தனர். இந்த பயங்கர வெடிவிபத்து குறித்து தகவல றிந்ததும் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

மேலும் மருத்துவ குழுவினரும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தீக்காயமடைந்த பக்தர்களை சம்பவ இடத்தில் இருந்து மீட்டு பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். வெடிவிபத்தில் மொத்தம் 154 பக்தர்கள் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு, கண்ணங்காடு, நீலேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரி களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் 10 பேருக்கு மிகவும் அதிக தீக்காயம் ஏற்பட்டிருக்கிறது.

அவர்கள் கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வெடி விபத்து குறித்து தகவலறிந்ததும் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் வெடி விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

மேலும் வெடிவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். வெடிவிபத்து நடந்த கோவிலில் சிறிய ரக பட்டாசுகளை வெடிக்க திட்டமிட்டிருந்தால் போலீசாரிடம் அனுமதி எதுவும் பெறவில்லை என்றும், ஆனால் விதிகளை மீறி அனுமதியில்லாத பெரிய அளவிலான பட்டாசுகளை வெடித்ததாக கூறப்படுகிறது.

மேலும் பட்டாசுகள் வெடிக்கும்போது, மக்கள் கூட்டம் உள்ள பகுதியில் இருந்து குறிப்பிட்ட தூரத்தில் வைத்துதான் வெடிக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. ஆனால் அதனை மீறி பட்டாசுகளை வெடித்துள்ளனர். இதனால் தான் வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெடிவிபத்து நடந்த வீரராகவர் கோவிலில் நேற்று நடந்த விழாவில் 1,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். வெடிவிபத்து ஏற்பட்டதும் அவர்கள் அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது கீழே விழுந்ததில் பலர் காயமடைந்துள்ளனர்.

மேலும் இந்த வெடி விபத்தில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் காயமடைந்திருக்கின்றனர். பாதுகாப்புக்காக கோவிலுக்கு அருகே உள்ள கட்டிடத்தில் நின்றபோது வெடி விபத்து ஏற்பட்டதால் அவர்கள் அதில் சிக்கி விட்டனர். 

Tags:    

Similar News