இந்தியா

உத்தரபிரதேச மாநிலத்தில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இன்று தொடக்கம்

Published On 2022-11-17 00:00 GMT   |   Update On 2022-11-17 00:45 GMT
  • நிகழ்ச்சியில் பங்கேற்கும் தமிழக முதல் குழுவை ஆளுநர் இன்று வழி அனுப்பி வைக்கிறார்.
  • தமிழகத்தில் இருந்து காசிக்கு 13 ரெயில்கள் இயக்கப்படுகிறது.

சுதந்திரத்தின் அமிர்த பெருவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக காசி தமிழ் சங்கமம்-2022 நிகழ்ச்சி, உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று தொடங்குகிறது. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வின் கீழ், தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் கொண்டாடும் வகையில் மத்திய அரசு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொன்மையான நாகரீக தொடர்பை மீண்டும் புதுப்பிக்கும் வகையில் டிசம்பர் 16ந் தேதிவரை ஒரு மாத காலம் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இணைந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்துகின்றன. 


இந்திய கலாச்சார நகரங்களின் பன்முகத் தன்மை குறித்து கல்விசார் பரிமாற்றங்கள், கருத்தரங்குகள், விவாதங்கள் உள்ளிட்டவைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு மாநில மக்களுடனான உறவை ஆழப்படுத்துவது இதன் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து முதல் குழு இன்று ரெயில் மூலம் வாரணாசி புறப்பட்டுச் செல்கிறது.

216 பேர் அடங்கியுள்ள இந்த குழுவில் 35 பேர் ராமேஸ்வரத்தில் இருந்தும், 103 பேர் திருச்சியில் இருந்தும், 78 பேர் சென்னை எழும்பூரில் இருந்தும் இன்று பயணம் மேற்கொள்கின்றனர்.

எழும்பூர் ரெயில் நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, இந்த குழுவில் இடம் பெற்றுள்ளவர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் கொடி அசைத்து அவர்களை வழி அனுப்பி வைக்கிறார். இந்த நிகழ்வில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி எல்.முருகன் கலந்து கொள்கிறார். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக தமிழ்நாட்டில் இருந்து காசிக்கு மொத்தம் 13 ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களில் மொத்தம் 2,592 பேர் பயணம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News