மக்களவை சபாநாயகர் தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு என்கிறது நிதிஷ் குமார் கட்சி
- பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்ட தொடர் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது.
- மக்களவை சபாநாயகர் தேர்தல் ஜூன் 26-ம் தேதி நடைபெறுகிறது.
பாட்னா:
பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்ட தொடர் வரும் 24-ம் தேதி தொடங்கி ஜூலை 3-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, மக்களவை சபாநாயகர் தேர்தல் ஜூன் 26-ம் தேதி நடைபெறும் என மக்களவை செயலகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய
கூட்டணி கட்சிகள் சபாநாயகர் பதவியை எதிர்பார்ப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், மக்களவை சபாநாயகர் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு ஐக்கிய ஜனதா தளம் தனது ஆதரவை அளிக்கும் என அக்கட்சியின் தலைவர் கே.சி.தியாகி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, கே.சி.தியாகி கூறுகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் அங்கம் வகித்து வருகின்றன. எனவே, சபாநாயகர் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கும் என தெரிவித்தார்.