ஜார்கண்ட், மகாராஷ்டிரா தேர்தல்களில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக அரவிந்த் கெஜ்ரிவால் பிரச்சாரம்!
- ஜார்க்கண்ட் சட்டமன்றத்திற்கு 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
- மகாராஷ்டிரா மாநிலத்தில் நவம்பர் 20-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நவம்பர் 20-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. மகாவிகாஸ் கூட்டணி தலைவர்கள் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது, மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 255 இடங்களுக்கு கூட்டணியில் உடன்பாடு எட்டியது.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திரபவார் மற்றும் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி ஆகியவை தலா 85 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
அதே சமயம் 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டமன்றத்திற்கு நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி அங்கு ஆட்சியில் உள்ளது.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கெஜ்ரிவாலை தவிர, சில மூத்த ஆம் ஆத்மி தலைவர்களும் மகாராஷ்டிராவில் பிரச்சாரம் செய்வார்கள் என்று சொல்லப்படுகிறது.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில், இந்த ஆண்டு மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் பெற்ற பின்னர், கடந்த மாதம் திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார். இதனையடுத்து தனது முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.