கெஜ்ரிவாலின் மேல்முறையீட்டு மனு - அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய சுப்ரீம்கோர்ட்
- டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி கைது செய்யப்பட்டார்
- கெஜ்ரிவால் கடந்த 10-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். மேல் முறையீடு மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் தரப்பில் முறையிடப்பட்டது
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் இன்று (ஏப்ரல் 15) வரை நீடிக்கப்பட்டுள்ளது.
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவால் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை கோர்ட்டு கடந்த 9-ந்தேதி தள்ளுபடி செய்தது.
மேலும் கைது நடவடிக்கையில் சட்ட விதிகள் எதுவும் மீறப்படவில்லை என்றும், உரிய காரணங்களின் அடிப்படையில் தான் விசாரணை நீதிமன்றம் அமலாக்கத் துறை காவலுக்கு உத்தரவிட்டதாகவும் டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்தது.
கைது செய்யப்பட்டதை உறுதி செய்த டெல்லி ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 10-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். மேல் முறையீடு மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் தரப்பில் முறையிடப்பட்டது.
இந்த நிலையில் கெஜ்ரிவாலின் மனுவை இன்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனுசிங்வி, தற்போது இந்த கைது காரணமாக கேஜ்ரிவாலால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடியவில்லை. ஆகவே விரைவாக இவ்வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும். குறிப்பாக வரும் 19-ம் தேதி இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், கைதுக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தொடர்பாக பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு இவ்வழக்கை ஏப்ரல் 29-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
இந்நிலையில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 23ம் தேதி வரை நீட்டித்து ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.