கேரளா ஆட்டோ டிரைவருக்கு பம்பர் பரிசு- லாட்டரியில் ரூ.25 கோடி கிடைத்தது
- மலேசியாவிற்கு சென்று சமையல்காரராக பணிபுரிய திட்டமிட்டிருந்தார்.
- மலேசியா செல்வதற்காக வங்கி மூலம் அவர் கடன் பெற்றிருந்தார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீவரஹம் நகரைச் சேர்ந்தவர் அனூப். ஆட்டோ டிரைவரான இவர் நேற்று முன்தினம் கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரி சீட்டை வாங்கியிருந்தார். ஒரு லாட்டரி டிக்கெட் விலை 500 ரூபாய். இந்த ஆண்டு 67 லட்சம் ஓணம் பம்பர் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டு கிட்டத்தட்ட அனைத்து டிக்கெட்டுகளும் விற்றிருந்த நிலையில், கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் முன்னிலையில் நேற்று அதிர்ஷ்ட குலுக்கல் நடைபெற்றது.
இதில் அனுப் வாங்கியிருந்த டி.ஜே. 750605 என்ற சீரியல் எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு ரூ.25 கோடி ரூபாய் பம்பர் பரிசு கிடைத்துள்ளது. முன்னதாக அவர் ஒரு ஓட்டலில் சமையல்காரராக இருந்த நிலையில், மலேசியாவில் சமையல்காரராகப் பணிபுரிய அவர் திட்டமிட்டிருந்தார். இதற்காக மலேசியா செல்வதற்காக வங்கி மூலம் அவர் கடன் பெற்றிருந்தார்.
தற்போது ரூ.25 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளதால் அனூப்பும் அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனிமேல் மலேசியாவிற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் கூறியுள்ளார். வருமான வரிப் பிடித்தம் போக அனூப்பிற்கு 15 கோடியே 75 லட்சம் ரூபாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஓணம் லாட்டரி டிக்கெட் பரிசு அம்மாநில வரலாற்றில் அதிக விலை மதிப்புள்ளதாக கருதப்படுகிறது.