ஆடு, எருமை, பன்றிகள் பலியிட்டு யாகம் நடத்தப்பட்டதா?: டி.கே. சிவகுமார் குற்றச்சாட்டுக்கு கேரள அரசு விளக்கம்
- கர்நாடகா அரசு, முதல்வர் சித்தராமையா மற்றும் தனக்கு எதிராக மிருக பலி கொடுத்து யாகம் என சிவக்குமார் தெரிவித்திருந்தார்.
- தேவசம் வாரியத்தின் கீழ் உள்ள எந்த ஒரு கோவிலிலும் மிருக பலி சம்பந்தப்பட்ட வழிபாடுகள் கிடையாது என கேரள அரசு விளக்கம்.
கேரளாவில் உள்ள ராஜராஜேஸ்வரி கோவில் அருகே தனக்கும், முதல்-மந்தரி சித்தராமையா மற்றும் எங்கள் அரசுக்கு எதிராக சத்ரு பைரவி யாகம், மிருகபலி நடைபெறுவதாகவும், யாகத்தில் 21 ஆடுகள், 5 பன்றிகள், 21 செம்மறி ஆடுகள் பலியிடப்பட்டுள்ளதாகவும் வேண்டுமானால் கேரளாவில் உள்ள ராஜ ராஜேஸ்வரி கோவிலை பாருங்கள் தெரியும் என கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் பகீர் தகவல் கூறினார்.
இதுகுறித்து கேரள அரசு விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. மேலும் கண்ணூர் கண்டிபரம்பா ஸ்ரீராஜராஜேஸ்வரி கோவில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உளவுத்துறை மற்றும் போலீசார் மூலம் கேரள அரசு சிறப்பு விசாரணை நடத்தியது.
விசாரணை குழுவினர் தீவிர விசாரணை நடத்தி கேரள டி.ஜி.பி.க்கு அறிக்கை அளித்தனர். அதில் சத்ருபைரவி யாகமோ, மிருக பலியோ நடைபெறவில்லை என தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும் கேரளாவில் உள்ள கண்ணூர் ஸ்ரீராஜராஜேஸ்வரி கோவில் நிர்வாக வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தேவசம் வாரியத்தின் கீழ் உள்ள எந்த ஒரு கோவிலிலும் மிருக பலி சம்பந்தப்பட்ட வழிபாடுகள் கிடையாது. அதுபோல் கேரளாவில் உள்ள மலபார் தேவசம் போர்டின் கீழ் உள்ள ராஜராஜேஸ்வரி கோவில் பெயர் பரவி வரும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
ஸ்ரீ ராஜராஜேஷ்வரி கோவில் கேரளாவில் உள்ள பழமையான மற்றும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். மலபார் தேவசாம் வாரியத்தின் கீழ் உள்ள எந்த ஒரு கோவில்களிலும் மிருக பலியுடன் கூடிய வழிபாடுகள் அல்லது பிரசாதம் கிடையாது என்று மலபார் என தெரிவித்துள்ளது.