வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்க அவசர சட்டம்... அவரிடமே ஒப்புதலுக்காக அனுப்பியது கேரள அரசு
- முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
- ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையிலான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை
திருவனந்தபுரம்:
கேரளாவில் அரசுக்கும், ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே கடும் பனிப்போர் நிலவி வருகிறது. பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் பதவிகளில் அரசு நியமிப்பவர்களுக்கு கவர்னர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுதான் இதற்கு காரணம். இதையடுத்து, துணைவேந்தர் நியமனங்களில் ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா, இரு மாதங்களுக்கு முன் கேரள சட்டசபையில் கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்த மசோதாவில் இதுவரை ஆளுநர் ஆரிப் கையெழுத்து போடவில்லை.
இதையடுத்து ஆளுநரை பல்கலைக் கழக வேந்தர் பதவியிலிருந்து நீக்க அவசர சட்டம் கொண்டு வர கேரள அரசு தீர்மானித்தது. இதுதொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி அவசர சட்டம் தயாரிக்கப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆளுநரை பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து மாற்றி, அந்த பதவியில் பிரபல கல்வியாளர்களை நியமிப்பதற்கான அவசரச் சட்டம், ஆளுநர் ஆரிப் முகமது கானின் ஒப்புதலுக்காக வந்துள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
எனினும், இந்த விவகாரத்தில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையிலான மோதல் இன்னும் முடிவுக்கு வராததால், ஆளுநர் உடனடியாக இந்த அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து பிரகடனம் செய்வது சாத்தியமில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.