இந்தியா

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. தகுதி நீக்கம்- ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2023-03-21 03:25 GMT   |   Update On 2023-03-21 03:25 GMT
  • தனித்தொகுதியில் இந்து மதத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே போட்டியிட முடியும்.
  • ராஜாவின் தாத்தா நெல்லையை சேர்ந்தவர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு உட்பட்ட தேவிகுளம் சட்டமன்ற தொகுதி தனித்தொகுதியாகும். கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ராஜா போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

இந்த தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் குமார், தேர்தலை ரத்து செய்யக்கோரி கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அதில் அவர், 'தனித்தொகுதியில் இந்து மதத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே போட்டியிட முடியும். ஆனால் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ராஜா போலி ஆவணங்களை தாக்கல் செய்து கடந்த தேர்தலில் போட்டியிட்டுள்ளார். எனவே அந்த தொகுதி தேர்தலை ரத்து செய்ய வேண்டும்' என்று கூறியிருந்தார்.

அந்த மனுவை கேரள ஐகோர்ட்டு விசாரணைக்கு ஏற்று கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலை ரத்து செய்து நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள ராஜா எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்கும் போது தமிழில் பதவிப் பிரமாணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜாவின் தாத்தா நெல்லையை சேர்ந்தவர். அவர் 1951-ம் ஆண்டு கேரளாவுக்கு குடும்பத்துடன் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News