பெரியாறு ஆற்றில் செத்து மிதந்த மீன்கள்- விசாரணைக்கு உத்தரவு
- நேற்று காலை பத்தளம் அணைக்கட்டு மற்றும் கீழக்கரையில் அதிகளவில் மீன்கள் செத்து மிதந்தன.
- பத்தளம் அணைக்கு அருகில் உள்ள ஆறுகள் கருப்பாக மாறி உள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள பெரியாறு ஆற்றில் நேற்று முன்தினம் இரவு ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. திடீரென ஆற்றில் மீன்கள் செத்து மிதந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மீன்கள் உயிரிழப்புக்கு காரணம் அப்பகுதியில் உள்ள ஏலூர்-எடையார் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை பத்தளம் அணைக்கட்டு மற்றும் கீழக்கரையில் அதிகளவில் மீன்கள் செத்து மிதந்தன. இதனால் பெரியாற்றில் கூண்டு அமைத்து மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கனமழையைத் தொடர்ந்து மே 20-ந்தேதி அணையின் ஷட்டர்கள் திறக்கப்பட்டதையடுத்து, பத்தளம் அணைக்கு அருகில் உள்ள ஆறுகள் கருப்பாக மாறி உள்ளது.
கேரள தொழில்துறை அமைச்சர் ராஜீவ், பெரியாற்றில் மீன்கள் செத்து மிதந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.