இந்தியா

ஹஜ் புனித பயணமாக 8,640 கி.மீ. நடந்து சென்று மெக்காவை அடைந்த கேரள வாலிபர்

Published On 2023-06-11 02:58 GMT   |   Update On 2023-06-11 02:58 GMT
  • கடந்த ஆண்டு ஜூன் 2-ந்தேதி கேரளாவில் இருந்து தனது நடை பயணத்தை தொடங்கினார்.
  • 8,640 கி.மீ. தூரத்தை 370 நாட்களில் கடந்து மெக்காவை அடைந்தார்.

திருவனந்தபுரம் :

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வளஞ்சேரியை சேர்ந்தவர் ஷிஹாப் சோட்டூர் (வயது 29). இவர் நடந்தே மெக்காவுக்கு ஹஜ் புனித பயணம் செல்ல முடிவு செய்தார். அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் 2-ந்தேதி கேரளாவில் இருந்து தனது நடை பயணத்தை தொடங்கினார்.

இந்தியாவில் இருந்து புறப்பட்ட ஷிஹாப் சோட்டூர் பாகிஸ்தான், ஈரான், ஈராக் மற்றும் குவைத் ஆகிய நாடுகளைக் கடந்து இறுதியில் சவூதி அரேபியாவை அடைந்துள்ளார். கடந்த மே மாதம் இரண்டாவது வாரத்தில் குவைத்தில் இருந்து சவூதி அரேபிய எல்லைக்குள் நுழைந்த அவர், அதன் பிறகு முஸ்லிம்களின் புனிதத் தலமான மதீனாவுக்கு சென்றார். அங்கு 21 நாட்கள் தங்கி இருந்தார்.

அதன்பிறகு மெக்காவுக்கு புறப்பட்டார். மதீனாவிற்கும் மெக்காவிற்கும் இடையிலான 440 கி.மீ. தூரத்தை ஷிஹாப் 9 நாட்களில் கடந்துள்ளார். மெக்காவுக்கு நடந்தே செல்ல வேண்டும் என்பது ஷிஹாப்பின் சிறு வயது கனவு என்றும், இதற்காக நாள் ஒன்றுக்கு 25 கி.மீ. அவர் நடந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

அவர் 8,640 கி.மீ. தூரத்தை 370 நாட்களில் கடந்து தற்போது முஸ்லிம்களின் புனித தலமான மெக்காவை அடைந்தார். இவர் தன்னுடைய மெக்கா புனித பயணம் குறித்த வீடியோ பதிவுகளை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு வந்தார்.

இதன்மூலம் மெக்காவுக்கு நடந்தே சென்ற சாதனைப் பட்டியலில் ஷிஹாப் இடம்பிடித்துள்ளார்.

Tags:    

Similar News