இந்தியாவில் தெரிந்தது 2023-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்
- பகுதி நேர சந்திர கிரகணம் ஒரு மணி நேரம் 19 நிமிடங்களுக்கு நீடித்தது.
- இது இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் ஆகும்.
புதுடெல்லி:
சூரியன்-சந்திரன்-பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வந்து, சூரியனின் நேரடிக் கதிர்கள் சந்திரனை ஒளிரவிடாமல் தடுக்கும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
அந்த வகையில் கடந்த 14-ம் தேதி சூரிய கிரகணம் ஏற்பட்டது. இது இந்தியாவில் தெரியவில்லை. பொதுவாக சூரிய கிரகணத்தைத் தொடர்ந்து சந்திர கிரகணம் ஏற்படுவதுண்டு.
இந்நிலையில், இன்று பகுதி நேர சந்திர கிரகணம் ஏற்பட்டது. அதிகாலை 1.05 மணிக்கு தொடங்கி 2.24 மணி வரை ஒரு மணி நேரம் 19 நிமிடங்களுக்கு சந்திர கிரகணம் நீடித்தது.
இந்த கிரகணம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் தென்பட்டது. இந்தியாவைத் தவிர ஆசியாவின் பிற பகுதிகள், ரஷியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா, அண்டார்டிகா உள்ளிட்ட பகுதிகளிலும் கிரகணம் தென்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குமுன் கடந்த மே 5-ந்தேதி சந்திர கிரகணம் நிகழ்ந்தது.
இது இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.