ஜார்கண்டில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சம்பாய் சோரன்
- அடுத்த முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
- சம்பாய் சோரன் ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
ராஞ்சி:
ஊழல் புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹேமந்த் சோரன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததும் அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்திற்குள் சோரன் கொண்டுவரப்பட்டார்.
ஜார்கண்ட் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையே, சம்பாய் சோரன் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், கடந்த 18 மணி நேரமாக மாநிலத்தில் அரசு செயல்படவில்லை. நீங்கள் விரைவில் ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து, மாநிலத்தைக் குழப்பத்திலிருந்து விடுவிப்பீர்கள் என எதிர்பார்க்கிறோம் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சம்பாய் சோரன் இன்று மாலை ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். அங்கு ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தனக்கு ஆதரவளிக்கும் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதங்களையும் அளித்தார்.