கொச்சி லாட்ஜில் கைக்குழந்தையை கொன்ற லிவ்விங் டுகெதர் ஜோடி கைது
- எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த போலீசார், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- குழந்தையை பெற்றோரே கொன்றிருக்க வேண்டும் என்று போலீசார் கருதினர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த வாலிபர் ஒருவரும், ஆலப்புழாவை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் லிவ்விங் டுகெதர் ஜோடியாக கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு ஒன்றரை மாதம் ஆன பெண் குழந்தை இருந்திருக்கிறது.
சம்பவத்தன்று அந்த ஜோடி கொச்சி கருகப்பள்ளியில் உள்ள லாட்ஜில் குழந்தையுடன் தங்கியிருந்திருக்கிறது. இந்நிலையில் அந்த ஜோடி, தங்களது குழந்தையை சுய நினைவு இல்லாத நிலையில், எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்திருக்கிறது.
அந்த குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. அந்த குழந்தையின் தலையில் காயம் இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள், அதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த போலீசார், அந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதே, குழந்தை மரணத்துக்கு காரணம் என்பது தெரியவந்தது.
ஆகவே அந்த குழந்தையை அவர்களது பெற்றோரே கொன்றிருக்க வேண்டும் என்று போலீசார் கருதினர். அது பற்றி குழந்தையை ஆஸ்பத்திரியில் அனுமதித்த தம்பதியிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் குழந்தையை கொன்றது அவர்கள் தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த தம்பதியை போலீசார் கைது செய்தனர். குழந்தையை கொன்றதற்கான காரணம் குறித்து இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.