இந்தியா

ராகுல் காந்தி-பிரியங்கா பிரசாரத்தின் போது காணப்பட்ட உற்சாகம் வாக்குச்சாவடிகளில் இல்லை

Published On 2024-11-14 07:09 GMT   |   Update On 2024-11-14 07:09 GMT
  • நட்சத்திர வேட்பாளரான பிரியங்கா காந்தி 3 கட்டங்களாக பிரசாரம் செய்தார்.
  • அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களில் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது.

திருவனந்தபுரம்:

மக்களவை தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதி எம்.பி.யாக பதவியேற்றார். அவர் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் பலத்த எதிர் பார்ப்புக்கு மத்தியில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகேரி, பாரதிய ஜனதா சார்பில் நவ்யா ஹரிதாஸ் உள்ளிட்ட 16 பேர் போட்டியிட்டனர்.

வயநாடு தொகுதியை பொருத்தவரை காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுக் கிடையே தான் கடும் போட்டி நிலவியது. இதனால் அந்த கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். நட்சத்திர வேட்பாளரான பிரியங்கா காந்தி 3 கட்டங்களாக பிரசாரம் செய்தார்.

அவருடன் அவரது சகோதரரான ராகுல் காந்தியும் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர்கள் பிரசாரம் சென்ற இடங்களில் எல்லாம் கட்சி தொண்டர்கள் மற்றும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் இடைத்தேர்தலில் பிரியங்கா காந்திக்கு அதிக வாக்குகள் கிடைக்கக்கூடும் என்றும், வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

தேர்தலுக்கு முந்தைய பல கணிப்புகளிலும் அவ்வாறே கூறப்பட்டன. ஆனால் வயநாடு இடைத்தேர்தலில் கடந்த தேர்தல்களை விட வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது. வாக்குப்பதிவு தொடங்கிய போது வாக்காளர்கள் ஆர்வமாக வந்து ஓடடுப் போட்ட நிலையில், நேரம் செல்லச்செல்ல வாக்காளர்களின் வருகை எதிர்பார்த்தபடி இல்லை.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களில் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது. இதன் காரணமாக வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது. அங்கு 14 லட்சத்து 71 ஆயிரத்து 742 வாக்காளர்கள் உள்ள நிலையில், 64.69 சதவீத வாக்குகளே பதிவாகின. 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் 80.33 சதவீதம் வாக்குப்பதிவு ஆகியிருந்தது.

கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலில் 73.48 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. அதனை ஒப்பிடுகையில் தற்போது நடந்த இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு 8.79 சதவீதம் குறைந்திருக்கிறது. ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி பிரசாரத்தின் போது காணப்பட்ட உற்சாகம் கூட, நேற்று நடந்த இடைத்தேர்தலின் போது வாக்குச்சாவடிகளில் காணப்படவில்லை.

வயநாடு மக்களவை தொகுதியில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. இளம் வயதினர் பலர் மேற்படிப்புக்காக வெளி நாடுகளில் இருப்பதால், வாக்குச்சாவடிகளுக்கு இளைஞர்களின் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது. வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததற்கு இது ஒரு காரணமாக கருதப்படுகிறது.

அதே நேரத்தில் கடந்த மே மாத இறுதியில் நடந்த வயநாடு நிலச்சரிவு அதிர்ச்சியில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை என்பதன் வெளிப்பாடாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. நிலச்சரிவால் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட மேப்பாடியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் மிக குறைந்த வாக்காளர்களே ஓட்டுப்போட வந்தனர்.

அவ்வாறு வந்தவர்களும் சோகத்துடனே காணப்பட்டனர். இப்படி பல்வேறு காரணங்களால் வாக்குப் பதிவு சதவீதம் குறைந்திருக்கிறது. வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பை பாதிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. எப்படியும் வயநாடு தேர்தல் களத்தில் வெற்றிவாகை சூடப்போவது யார்? என்பது ஓட்டுக்கள் எண்ணிக்கை நடைபெற இருக்கும் வருகிற 23-ந்தேதி தெரிந்துவிடும்.

Tags:    

Similar News