இந்தியா

அரசியலமைப்பை உருவாக்கியவர்களுக்கு ராம ராஜ்யம் உத்வேகமாக இருந்தது: பிரதமர் பெருமிதம்

Published On 2024-01-28 07:44 GMT   |   Update On 2024-01-28 07:44 GMT
  • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாட்டு மக்களை ஓரணியில் ஒருங்கிணைத்துள்ளது.
  • இந்தாண்டு 13 விளையாட்டு வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.

புதுடெல்லி:

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

அயோத்தியில் நடந்த ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாட்டு மக்களை ஓரணியில் ஒருங்கிணைத்து உள்ளது. அனைவரின் மனங்களில் ராமர் உள்ளார்.

கடந்த 22-ம் தேதி மாலை நாடு முழுவதும் ராமஜோதி ஏற்றி தீபாவளி பண்டிகை கொண்டாடினர். அன்று நாட்டின் பலம் தெரிந்தது. கடவுள் ராமரின் ஆட்சி, நமது அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு முன்மாதிரியாக இருந்துள்ளது.

பத்ம விருதுகளால் கவுரவிக்கப்படும் பலர், பெரிய மாற்றங்களைச் செய்ய அடிமட்டத்தில் இருந்து பணியாற்றியவர்கள்.

பத்ம விருதுகள் அமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அந்த விருது மக்களின் பத்மா ஆக மாறியுள்ளது. திறமையான விளையாட்டு வீரர்கள் அர்ஜூனா விருது மூலம் கவுரவிக்கப்பட்டனர்.

இந்தாண்டு 13 விளையாட்டு வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. நமது இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை உயரத்திற்கு கொண்டு சென்ற வெளிநாட்டினருக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், தைவான், மெக்சிகோ மற்றும் வங்காள தேசத்தைச் சேர்ந்தவர்களும் விருது பெற்றுள்ளனர்.

இந்தாண்டு குடியரசு தின அணிவகுப்பு சிறப்பாக இருந்தது. இந்த அணிவகுப்பில் இருந்த பெண்கள் சக்தி குறித்து அனைவரும் பேசினர்.

இன்றைய இந்தியாவில் நமது மகள்கள், பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சிறப்பாக பணியாற்றுகின்றனர். சுய உதவிக் குழுக்களில் பெண்கள் முத்திரை பதித்துள்ளனர். நாடு முழுவதும் இக்குழுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களின் பணியும் விரிவடைகிறது.

இன்று நிறைய பேர் தங்களது மரணத்திற்கு பிறகு உடல் உறுப்பு தானம் செய்கின்றனர். இந்த முடிவு எளிதானது அல்ல. ஆனால், பலரின் வாழ்க்கையை காப்பாற்றி உள்ளது. இவர்களின் கடைசி ஆசையை நிறைவேற்றிய குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என தெரிவித்தார்.

Tags:    

Similar News