துணை பிரதமர் பதவி: நிதிஷ் குமாருக்கு வலைவிரிக்கும் காங்கிரஸ் கூட்டணி
- பா.ஜனதா ஆட்சி அமைப்பதற்கான தனி மெஜாரிட்டியை இழக்கும் நிலையில் உள்ளது.
- பா.ஜனாதா கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமாரை இழுக்க இந்தியா கூட்டணி முடிவு.
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பாஜக கூட்டணி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு கூறிய நிலையில், கருத்துக் கணிப்பை மீறி இந்தியா கூட்டணி 230 தொகுதிகளுக்கு மேலான இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.
பாஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 233 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மற்றவை 17 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
தேர்தல் வாக்கு எண்ணிக்கை முழுவதுமாக முடிவடையும்போது சுமார் 240 இடங்களை தாண்டினால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படும். இதற்கு முக்கிய காரணம் பா.ஜனதாவுக்கு ஆட்சி அமைப்பதற்கான தனி மெஜாரிட்டி (272) கிடைக்கவில்லை.
பாஜக கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு (16), நிதிஷ் குமார் (14) ஆகியோரிடம் 30 இடங்கள் உள்ளது. இந்த 30 இடங்களை பாஜகவிடம் இருந்து இழுத்துவிட்டால் பாஜனதாவுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.
இந்த கணக்கை மனதில் வைத்து இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் காய் நகர்த்தி வருகின்றனர். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி ஆட்சி அமைப்பதற்கான தனி மெஜாரிட்டியை பிடித்துள்ளது.
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவிடம் இந்தியா கூட்டணி கட்சியில் உள்ள சரத் பவார் டெலிபோன் மூலம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் நிதிஷ் குமாரிடமும் பேசியதாகவும் கூறப்படுகிறது. அப்போது துணை பிரதமர் பதவி தர தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் இந்தியா கூட்டணி தலைவர்கள் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவை இழுக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்வார்கள் எனத் தெரிகிறது.