வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்: வாக்களிக்க முடியாமல் திரும்பிய மம்தா பானர்ஜியின் சகோதரர்
- மம்தா சகோதரர் ஹவுரா எம்.பி. மீது அதிருப்தியில் இருந்தார்.
- பா.ஜனதாவில் இணைய இருப்பதாகவும் வதந்தி பரவியது.
மக்களவை தேர்தலின் ஐந்தாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று மேற்கு வங்காள மாநிலம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு நடைபெற்று முடிந்துள்ளது.
இதில் மேற்கு வங்காளத்தின் ஹவுராவும் ஒன்று. இந்த தொகுதியில் மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியின் சகோதரர் ஸ்வாபன் பானர்ஜிக்கு (பாபுன்) வாக்கு உள்ளது.
இன்று தனது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக பாபுன் வாக்குச்சாவடிக்கு சென்றார். அப்போது அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் ஏமாற்றத்துடன் திரும்பினார்.
இது தொடர்பாக பாபுன் கூறுகையில் "நான் என்னுடைய வாக்கை செலுத்துவதற்காக சென்றேன். அப்போது என்னுடைய வாக்கு வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது தெரியவந்தது. நான் பல ஆண்டுகளாக வாக்கு செலுத்தியிருக்கிறேன். இந்த வருடம் வாக்களிக்க முடியாததால் ஏமாற்றம் அடைகிறேன். ஜனநாயக நாட்டின் குடிமகனாக எனக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது" என்றார்.
"தேர்தல் ஆணையம் முழு விவரத்தையும் கவனித்து வருகிறது. இது ஏன் நடந்தது என்பது குறித்து விளக்கம் மட்டுமே தேர்தல் ஆணையத்தால் வழங்க முடியும்" என திரிணாமுல் காங்கிரஸ் செய்து தொடர்பாளர் ஷாந்தனு சென் தெரிவித்துள்ளார்.
ஹவுரா எம்.பி.யாக இருக்கும் பிரசுன் பானர்ஜி மீது தனது அதிருப்தியை பாபுன் தெரிவித்திருந்தார். இதனால் சுயேசட்சையாக போட்டியிடுவார் என செய்தி வெளியானது. மேலும், பா.ஜனதாவில் இணைய இருப்பதாகவும் வதந்தி பரவியது.
பாபுன் மேற்கு வங்காள மாநில ஒலிம்பிக் சங்க தலைவர், பெங்கால் ஹாக்கி சங்க தலைவர், பெங்கால் குத்துச்சண்டை சங்க செயலாளராக உள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் விளையாட்டுப் பிரவு பொறுப்பாளராகவும் உள்ளார்.