மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை சுட்டிக்காட்டிய கவர்னர்: ஆம் ஆத்மியின் செயலற்ற தன்மை என விமர்சனம்
- துணை நிலை ஆளுநர் பல இடங்களுக்கு சென்று அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசனை.
- சாலைகள் குண்டு குழியுமாக உள்ளதை படம் எடுத்து டுவிட்டரில் பக்கத்தில் வெளியீடு.
டெல்லியில் ஆம் ஆத்மியின் மாநில ஆட்சி நடைபெற்று வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருந்து வருகிறார். நிர்வாகம், அதிகாரிகள் நியமனம் போன்ற விவகாரத்தில் மாநில அரசுக்கும் துணை நிலை ஆளுநருமான சக்சேனாவிற்கும், கெஜ்ரிவால் அரசுக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் டெல்லி துணை நிலை ஆளுநர் டெல்லி மாநகராட்சிக்கு உட்பட்ட பல காலணிகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது பல சாலைகள் குண்டு குழியுமாக கிடப்பது, கழிவுநீர் பணிகள் முழுமை அடையாமல் இருப்பது, குப்பைகள் கொட்டப்பட்டிருப்பதை கண்டார். அவற்றை படங்கள் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். மேலும், இது தொடர்பாக ஆம் ஆத்மி அரசின் கீழ் உள்ள துறைகள் செயலற்று இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் "டெல்லியின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் அடிப்படை வசதி குறைபாடு காரணமாக தனது புகார்கள் வந்தது. நேற்று, ஒக்லாவில் உள்ள சஞ்சய் காலனியில் உள்ள ஜேஜே பகுதிக்கு சென்றிருந்தேன். அங்குள்ள கள நிலவரத்தை பார்த்தேன். மாநில அரசின் செயலற்ற தன்மைக்கு இதைவிட உதாரணங்களை பார்க்க முடியாது" என அரவிந்த் கெஜ்ரிவாலை டேக் செய்து பல படங்களை பகிர்ந்துள்ளார்.
இதேபோல் முன்னதாக ஷாஹத்ராவில் உள்ள குவாலண்டர் காலனியில் இருந்து எடுத்த படங்களை பதிவிட்டிருந்தார்.
இதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார். துணைநிலை ஆளுநர் செய்த வேலையை எதிர்க்கட்சியான பா.ஜனதா செய்திருக்க வேண்டும். அரசியலமைப்பு பதவியான துணை நிலை ஆளுநராக இருந்த போதிலும், எதிர்க்கட்சிகள் செய்ய வேண்டுயதை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.