மத்திய பிரதேசத்தில் திறந்த வெளியில் இறைச்சி, முட்டை விற்க தடை
- அயோத்தி செல்லும் யாத்ரீகர்கள் வசதிக்காக இந்த முடிவு.
- போலீஸ், நகர்ப்புற அமைப்புகள், உணவுத்துறை மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள முடிவு.
மத்திய பிரதேச மாநில முதல்வராக மோகன் யாதவ் நேற்று பதவி ஏற்ற நிலையில், அம்மாநிலத்தில் உணவு பாதுகாப்பு விதிமுறையின் கீழ் திறந்த வெளியில் இறைச்சி, முட்டை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான் விழிப்புணர்வு பிரசாரம் உணவுத்துறை, போலீஸ், உள்ளூர் நகர்ப்புற அமைப்புகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. டிசம்பர் 15-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும்.
போபாலில் உள்ள நேரு மைதானத்தில் மோகன் யாதவ் நேற்று முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார. ஜெக்திஷ் தேவ்தா, ராஜேந்திர சுக்லா ஆகியோர் துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டனர். இந்த விழாவில் பிரதமர் மோடி, அமித் ஷா, ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் ஆகியோர் கலந்த கொண்டனர்.
ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட மோகன் யாதவ், தனது முதல் கேபினட் கூட்டத்திலேயே இந்த முடிவை எடுத்துள்ளார்.
அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. மத்திய பிரதேசம் வழியாக அயோத்தி செல்லும் ராமர் பக்தர்கள் வரவேற்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.