இந்தியா

மதமாற்றம் நடைபெறும் மதக் கூட்டங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம் கருத்து

Published On 2024-07-02 09:38 GMT   |   Update On 2024-07-02 09:38 GMT
  • அரசியலமைப்பின் 25-வது பிரிவு மத பிரசாரம் உள்ளிட்டவைகளுக்கு அனுமதி அளிக்கிறது.
  • ஆனால் ஒரு நம்பிக்கையில் இருந்து மற்றொரு நம்பிக்கைக்கு மாற்றுவதற்கு அனுமதி வழங்கவில்லை.

மதமாற்றம் நடைபெறும் மதக் கூட்டங்களுக்கு மக்களை அழைத்துச் சென்ற குற்றச்சாட்டில் ஜாமின் கேட்டவரின் வழக்கு விசாரணையில் உத்தர பிரதேச மாநில அலகாபாத் உயர்நீதிமன்றம் மதமாற்றம் நடைபெறும் மதக் கூட்டங்கள் நிறுத்தப்பட வேண்டும். இல்லையெனில் ஒருநாள் மெஜாரிட்டி மக்கள் மைனாரிட்டி ஆகிவிடுவார்கள் எனத் தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஹமிர்பூரில் இருந்த டெல்லியில் நடைபெறும் மதக் கூட்டங்களுக்கு மக்களை அழைத்துச் சென்று மதமாற்றம் செய்யப்படுவதாக கைலாஷ மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் ராம்காளி பிரஜாபதி என்பவர் தனது சகோதரர் ராம்பாலை கைலாஷ் டெல்லிக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை என புகார் அளித்தார்.

ராம்பால் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவருக்கு டெல்லியில சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாகவும், விரைவில் ஊர் திரும்பி விடுவார் எனவும் கைலாஷ் தெரிவித்தார். ஆனால் ராம்பால் திரும்பவில்லை. இது தொடர்பாக ராம்காளி கைலாஷிடம் கேட்டபோது, அவர் திருப்தி அளிக்கும் வகையிலும் பதில் அளிக்கவில்லை என புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஹமிர்பூர் கிராமத்தில் இருந்து ஏராளமான மக்களை டெல்லி மதக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்று கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாற்றியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இதனால் கைலாஷ் மீது கடத்தல் மற்றும் மதமாற்றம் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.கே. கிரி, இதுபோன்ற மதக் கூட்டங்களில் ஏராளமானோர் கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கைலாஷ் ஹமிர்பூரில் இருந்து மக்களை அழைத்து சென்று, அதற்குப் பதிலாக பணம் பெற்றுள்ளார் என வாதிட்டார்.

அதேவேளையில் கைலாஷ் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் சாகேத் ஜெய்ஸ்வால் "ராம்பால் கிறிஸ்தவராக மதமாற்றம் செய்யப்படவில்லை. அவர் கிறிஸ்தவ மதக் கூட்டத்தில் மட்டுமே கலந்து கொண்டார். சோனு பாஸ்டர் இதுபோன்ற கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்தார். அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

அப்போது நீதிபதி ரோகித் ரஞ்சன் அகர்வால் "அரசியலமைப்பின் 25-வது பிரிவு மத பிரசாரம் உள்ளிட்டவைகளுக்கு அனுமதி அளிக்கிறது. ஆனால் ஒரு நம்பிக்கையில் இருந்து மற்றொரு நம்பிக்கைக்கு மாற்றுவதற்கு அனுமதி வழங்கவில்லை.

பிரசாரம் என்ற வார்த்தை ஊக்குவித்தல் என்று அர்த்தம். ஆனால், ஒரு நபரை அவரது மதத்தில் இருந்து இன்னொரு மதத்திற்கு மாற்றுவது என்று அர்த்தம் அல்ல.

இதுபோன்ற செயல்முறைக்கு அனுமதி அளித்தால், இந்த நாட்டின் மெஜாரிட்டி மக்கள் ஒருநாள் மைனாரிட்டி ஆகிவிடுவார்கள். இந்திய மக்கள் இதுபோன்ற மதக் கூட்டம் மூலம் மதமாற்றம் செய்யப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

உத்தர பிரதேச மாநிலம் முழுவதும் எஸ்சி/எஸ்டி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகள் உள்ளிட்ட பிற சாதியினரை கிறிஸ்தவர்களாக மாற்றும் சட்ட விரோதச் செயல்கள் நடைபெற்று வருகிறது என்பது பல வழக்குகளில் இந்த நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்துள்ளது" என்றார்.

அத்துடன் கைலாஷுக்கு ஜாமின் வழங்க மறுத்துவிட்டது.

Tags:    

Similar News