வீட்டின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 2 மகன்களுடன் தன்னந்தனியாக 22 நாட்களில் கிணறு தோண்டிய பெண்
- ஷகிலா வேலைக்கு சென்று சேர்த்த பணத்தில் சமீபத்தில் ஒரு நிலம் வாங்கினார். அ
- தாயும், மகன்களும் சேர்ந்து கிணறு தோண்டி அதில் தண்ணீரும் வந்த தகவல் ஊர் முழுவதும் பரவியது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் மலப்புரத்தை அடுத்த குட்டிப்புரம் பகுதியை சேர்ந்தவர் ஷகிலா (வயது 40).
ஷகிலாவுக்கு 2 மகன்கள் மட்டும் உள்ளனர். அவர்கள் பிளஸ்-2 மற்றும் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். 3 பேரும் அந்த பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
ஷகிலா வேலைக்கு சென்று சேர்த்த பணத்தில் சமீபத்தில் ஒரு நிலம் வாங்கினார். அங்கு வீடு கட்ட முடிவு செய்தார். அதற்கு தண்ணீர் தேவை என்பதால் தனது நிலத்தில் சொந்தமாக கிணறு தோண்ட முடிவு செய்தார்.
அதற்கு அதிக பணம் தேவைப்பட்டதால் அவர் தனது மகன்களுடன் சேர்ந்து தன்னந்தனியாக கிணறு தோண்ட முடிவு செய்தார்.
இதையடுத்து கடந்த மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறை விடப்பட்டபோது அவர் தனது 2 மகன்களுடன் சேர்ந்து கிணறு தோண்டும் பணியை தொடங்கினார். இதற்கான கருவிகளை வாடகைக்கு எடுத்து பணி செய்தார். தினமும் காலை 9 மணிக்கு வேலை தொடங்கினால் மாலை 6 மணிவரை இடைவிடாது மூவரும் வேலை செய்தனர்.
இப்படி 22 நாட்களில் அவர் முழு கிணற்றையும் தோண்டி முடித்தனர். 22-வது நாள் இறுதியில் அவர்கள் தோண்டி கொண்டிருந்தபோது கிணற்றில் தண்ணீர் ஊற்றெடுத்து பெருகியது. இதை கண்டு தாயும், மகன்களும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர்.
தாயும், மகன்களும் சேர்ந்து கிணறு தோண்டி அதில் தண்ணீரும் வந்த தகவல் ஊர் முழுவதும் பரவியது. தகவல் அறிந்த மக்கள் அங்கு சென்று பார்த்ததுடன் ஷகிலாவையும், அவரது 2 மகன்களையும் பாராட்டினர்.
இதுபற்றி ஷகிலா கூறும்போது, கிணறு தோண்டி களைத்திருக்கும்போது எனது மகன்கள் பாட்டு பாடி உற்சாகப்படுத்துவார்கள். அதில் களைப்பை மறந்து மீண்டும் வேலை செய்வோம்.
கிணற்றில் தண்ணீர் வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுபோல கஷ்டப்பட்டு எப்படியாவது வீட்டையும் கட்ட திட்டமிட்டு உள்ளோம், என்றார்.