கருப்பு அறிக்கை வெளியிட்டார் மல்லிகார்ஜூன கார்கே
- விலைவாசி உயர்வு குறித்து கேட்டால் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி பற்றி பேசுகிறார்கள்.
- 2024-ல் பா.ஜனதாவின் அநீதியின் இருளில் இருந்து நாட்டை மீட்டெடுப்போம்.
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைமையிலான 2014-ம் ஆண்டுக்கு முந்தைய மத்திய அரசின் 10 ஆண்டு காலத்தில் இந்தியாவின் பொருளாதார நிலையுடன், தற்போது பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதாவின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரத்தை ஒப்பிடும் வகையில் மத்திய அரசு வெள்ளை அறிக்கையை பாராளுமன்றத்தில் வெளியிட முடிவு செய்துள்ளது.
மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார். அதன் மீது விவாதம் நடைபெற்ற பிறகு ஓட்டெடுப்பு நடத்தப்படும்.
இந்த நிலையில் பா.ஜனதா அரசின் 10 ஆண்டு கால ஆட்சியின் தோல்விகள் குறித்து கருப்பு அறிக்கை வெளியிட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டது. அதன்படி நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டுகால ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று கருப்பு அறிக்கை வெளியிட்டார்.
வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயிகளின் துயரம், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாதது, பெண்களுக்கு அநீதி போன்றவற்றில் அரசின் தோல்விகளை காங்கிரஸ் கருப்பு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
பின்னர் மல்லிகார்ஜூன கார்கே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப் போது அவர் கூறியதாவது:-
வேலையில்லா திண்டாட்டத்தின் முக்கிய பிரச்சனையை நாங்கள் எழுப்புகிறோம். இதுபற்றி பா.ஜனதா ஒருபோதும் பேசுவதில்லை. ரூ.2 கோடி பேருக்கு வேலை, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்பது மோடியின் உத்தரவாதம், ஆனால் அவரால் அதை செய்ய முடியவில்லை. தற்போது புதிய உத்தரவாதங்களை கொண்டு வருகிறார்.
விலைவாசி உயர்வு குறித்து கேட்டால் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி பற்றி பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் இப்போது ஆட்சி செய்கிற கிறார்கள். என்ன செய்தார்கள் என்று பதில் சொல்ல வேண்டும்.
கேரளா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற பா.ஜனதா அல்லாத மாநிலங்களில் பாகுபாடு காட்டப்படுகிறது.
விசாரணை அமைப்புகளை பா.ஜனதா தவறாக பயன்படுத்துகிறது. ஜனநாயகம் ஆபத்தான நிலையில் இருக்கிறது. இந்தியாவின் சுதந்திரத்தை காங்கிரஸ் உறுதி செய்தது. 2024-ல் பா.ஜனதாவின் அநீதியின் இருளில் இருந்து நாட்டை மீட்டெடுப்போம்.
இவ்வாறு மல்லிகார் ஜூன கார்கே கூறியுள்ளார்.