பாராளுமன்ற தேர்தல்: 200-ஐ தாண்டுவீங்களா? பா.ஜ.க.வுக்கு நேரடி சவால் விட்ட மம்தா பானர்ஜி
- மேற்கு வங்க மாநிலத்தில் சி.ஏ.ஏ. சட்டம் அமல்படுத்தப்படாது.
- இதனால் அதற்கு விண்ணப்பிக்கவே வேண்டாம்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சவால் விட்டுள்ளார். நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி 400-க்கும் அதிக இடங்களில் வெற்றி பெறும் என கூறி வரும் நிலையில், அவர்களால் 200 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேலும், மேற்கு வங்க மாநிலத்தில் சி.ஏ.ஏ. சட்டம் அமல்படுத்தப்படாது என்று மீண்டும் உறுதியளித்துள்ளார். மேலும், சி.ஏ.ஏ.-வுக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என பொது மக்களை மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு விண்ணப்பிக்கும் போது, நீங்கள் அந்நிய நாட்டை சேர்ந்தவராகி விடுவீர்கள், இதனால் அதற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்று அவர் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர் "பா.ஜ.க.-வினர் 400-க்கும் அதிக இடங்களை பிடிப்போம் என கூறி வருகின்றனர், நான் அவர்களுக்கு சவால் விடுகிறேன், அவர்கள் முதலில் 200 இடங்களில் வெற்றி பெறுவார்களா என்று பார்ப்போம். 2021 தேர்தலின் போது மேற்கு வங்கத்தில் அவர்கள் 200-க்கும் அதிக இடங்களை குறி வைத்து, வெறும் 77 இடங்களில் தான் வெற்றி பெற்றனர்."
"சி.ஏ.ஏ. தொடர்பான மோடியின் உத்தரவாதம் பூஜ்ஜியத்திற்கு சமம். சி.ஏ.ஏ. சட்டம் குடியுரிமை கொண்டவர்களை வெளிநாட்டவராக மாற்றிவிடும். சி.ஏ.ஏ.-வை அனுமதித்தால் அடுத்து என்.ஆர்.சி. வந்துவிடும். நாங்கள் சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி. உள்ளிட்டவைகளை மேற்கு வங்கத்தில் அனுமதிக்க மாட்டோம்," என்று தெரிவித்தார்.