இந்தியா

பெண் மருத்துவர் கொலை: மம்தா பானர்ஜி - மருத்துவர் குழு பேச்சுவார்த்தை தொடக்கம்

Published On 2024-09-16 15:42 GMT   |   Update On 2024-09-16 15:42 GMT
  • மருத்துவர்கள் மற்றும் முதல்வர் இடையிலான பேச்சுவார்த்தை மாலை 5 மணிக்கு துவங்க இருந்தது.
  • ஐந்து அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும்.

கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டும், ஐந்து அம்சங்கள் அடங்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஜூனியர் மருத்துவர்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

உச்சநீதிமன்ற கெடு, மாநில அரசின் எச்சரிக்கை என எதற்கும் அடிபணியாத மருத்துவர்கள் தங்களது ஐந்து அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தும் மருத்துவர்களை பேச்சுவார்த்தை அழைத்தார். எனினும், பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, மருத்துவர்களும் அதற்கு தயாரான சூழலில், கடைசி நிமிடங்களில் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

இந்த நிலையில், மாநில அரசு சார்பில் பேச்சுவார்த்தைக்கு ஐந்தாவது மற்றும் கடைசி முறை அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில் மருத்துவர்கள் இன்று மாலை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இல்லத்திற்கு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள சென்றுள்ளனர்.

பேச்சுவார்த்தையில் 30 பேர் அடங்கிய மருத்துவர்கள் குழு மம்தா பானர்ஜி இல்லத்திற்கு இன்று மாலை 6.20 மணி அளவில் வந்தனர். மருத்துவர்கள் மற்றும் மேற்கு வங்க முதல்வர் இடையிலான பேச்சுவார்த்தை மாலை 5 மணிக்கு துவங்க இருந்த நிலையில், இரவு 7 மணிக்கு தான் பேச்சுவார்த்தை துவங்கியது.

இந்த பேச்சுவார்த்தையில் நடைபெறும் வாதங்களை பதிவு செய்ய மருத்துவர்கள் குழு சார்பில் சுருக்கெழுத்தாளர்களும் உடன் சென்றுள்ளனர். சுருக்கெழுத்தாளர்கள் பதிவு செய்யும் ஆவணத்தை பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் அனைவரும் கையெழுத்திட உள்ளனர். இதுதவிர அரசு சார்பில் வீடியோ பதிவும் செய்யப்படுகிறது.

பேச்சுவார்த்தைக்கு பிறகு என்ன முடிவு எடுக்கப்படும் என்பதை மருத்துவர்கள் குழு களத்தில் போராடும் மருத்துவர்களிடையே ஆலோசனை செய்த பிறகே தெரிவிக்கும் என்று முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஐந்து அம்ச கோரிக்கையில் எக்காரணம் கொண்டும் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று மருத்துவர்கள் குழு திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறது.

முன்னதாக ஜூனியர் மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் 29 நோயாளிகள் உயிரிழந்த அம்பாவிதமும் அரங்கேறியது. இதைத் தொடர்ந்து, உயிரிழந்த 29 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்குவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்தார்.


Tags:    

Similar News