இந்தியா

சந்திக்க அழைத்த மம்தா.. கண்டிஷன் போட்டு போராட்டத்தை தொடரும் மருத்துவர்கள் - என்ன நடக்கிறது?

Published On 2024-09-11 14:27 GMT   |   Update On 2024-09-11 14:27 GMT
  • கொல்கத்தாவில் ஜூனியர் மருத்துவர்கள் சுகாதார அமைச்சகம் முன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
  • இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டால் இன்றோ நாளையோ நாங்கள் முதல்வர் மம்தாவை சந்திக்க தயாராக இருக்கிறோம்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்ற குற்றவாளியிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. பெண் மருத்துவருக்கு விரைந்து நீதி கிடைக்கவும் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு இந்த விவகாரத்தில் அலட்சியமாகச் செயல்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டியும் கொல்கத்தாவில் ஜூனியர் மருத்துவர்கள் சுகாதார அமைச்சகமான ஸ்வத்ய பவன்[Swathya Bhavan] முன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மருத்துவர்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிட்டு நேற்று மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்தது. ஆனால் ஜுனியர் மருத்துவர்கள் உச்சநீதிமன்றத்தின் கெடுவை புறக்கணித்து தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் போராடும் மருத்துவர்களின் பிரதிநிதிகளாக 12 முதல் 15 பேர் அடங்கிய குழு இன்று மாலை 6 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதல்வர் மம்தாவை சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் 25 முதல் 35 பேர் கொண்ட குழுவாக தாங்கள் வருவோம் என்றும் முதல்வர் உடனான சந்திப்பை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்றும் போராடும் மருத்துவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். இந்த நிபந்தனைகள் கொண்ட புதிய கடிதத்தை மேற்கு வங்க தலைமை செயலருக்கு இமெயில் மூலம் போராடும் மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டால் இன்றோ நாளையோ நாங்கள் முதல்வர் மம்தாவை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று அந்த இமெயிலில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் அரசு தரப்பில் இந்த நிபந்தனைகள் ஏற்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அப்படி நடந்தால் மம்தா- மருத்துவர்கள் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Tags:    

Similar News