ஆளுநரை விமர்சிக்கக் கூடாதா? உத்தரவை எதிர்த்த மம்தா.. உடனே ரத்து செய்த நீதிமன்றம்! ஆனால்..
- சி.வி. ஆனந்த போஸ் மீது ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார்.
- ' ஆளுநர் மாளிகை செல்வதற்குப் பெண்கள் பயப்படுகின்றனர்' என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியிருந்தார்.
மேற்கு வங்க கவர்னர் சி.வி. ஆனந்த போஸ் மீது ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். ஆனால், அந்த குற்றச்சாட்டை கவர்னர் மறுத்தார். இதனையடுத்து, 'ஆளுநர் மாளிகை செல்வதற்குப் பெண்கள் பயப்படுகின்றனர்' என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியிருந்தார்.
மேலும், அண்மையில் நடைபெற்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற 2 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு பதிவு பிரமாணம் செய்து வைக்காமல் கவர்னர் இழுத்தடித்து வந்தார். அதனால் அந்த 2 எம்.எல்.ஏ.க்களும் இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநரை விமர்சித்தனர்.
இந்நிலையில், மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். கடந்த ஜூலை 17 ஆம் தேதி இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது, ஆளுநருக்கு எதிராக அரசியல் ரீதியாக எந்த கருத்தையும் மம்தாவும் அவரது கட்சியினரும் தெரிவிக்கக் கூடாது என்று நீதிபதி கிருஷ்ண ராவ் உத்தரவிட்டார். இந்த உத்தரவானது அடுத்த மாதம் ஆகஸ்ட் 14 வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து மம்தா பானர்ஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில்தான் நேற்று அந்த கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பிஸ்வரூப் சவுத்ரி மற்றும் ஐ.பி.முகர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கருத்துச் சுதந்திரத்தை மதித்து சட்டத்திற்கு உட்பட்டு முதல்வர் மம்தா பானர்ஜி ஆளுநரை விமர்சிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் விமர்சிக்கக்கூடாது என்ற முந்தைய தீர்ப்பு செயலிழந்துள்ளது.