இந்தியா (National)

மன் கி பாத் உரை: மூலிகை செடி வளர்ப்பில் மதுரை ஆசிரியை சுபஸ்ரீக்கு பிரதமர் மோடி பாராட்டு

Published On 2024-09-29 07:52 GMT   |   Update On 2024-09-29 07:52 GMT
  • அரியவகை மருத்துவ குணம் கொண்ட மூலிகை தோட்டத்தை உருவாக்கி உள்ளார்.
  • தோட்டத்தைப் பார்க்க வெகு தொலைவில் இருந்து மக்கள் வருகிறார்கள்.

புதுடெல்லி:

பிரதமர் மோடி தனது மன் கி பாத் உரையில், மூலிகை செடி வளர்ப்பில் ஈடுபடும் மதுரையை சேர்ந்த ஆசிரியை சுபஸ்ரீக்கு பாராட்டு தெரிவித்தார்.

இதுகுறித்து மோடி கூறும்போது, `நம்மைச் சுற்றி எந்த ஒரு துன்பத்திலும் பொறுமையை இழக்காத சிலர், அதிலிருந்து கற்றுக் கொள்கிறார்கள்.

அப்படிப்பட்ட பெண்மணிகளில் ஒருவர் தமிழ்நாட்டின் மதுரையை சேர்ந்த ஆசிரியை சுபஸ்ரீ. இவர் அரிய மற்றும் மிகவும் பயனுள்ள மூலிகைகள் கொண்ட அற்புதமான தோட்டத்தை உருவாக்கி உள்ளார். அவரது தந்தையை பாம்பு கடித்தபோது அவரை காப்பாற்ற பாரம்பரிய மூலிகைகள் உதவியது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, அவர் பாரம்பரிய மருந்துகள் மற்றும் மூலிகைகளை ஆராயத் தொடங்கினார். அவர் மதுரை வெரிச்சியூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட அரியவகை மருத்துவ குணம் கொண்ட மூலிகை தோட்டத்தை கடினமாக உழைத்து உருவாக்கி உள்ளார்.

கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகைகளை மக்களுக்கு வழங்கினார். இவரது மூலிகைத் தோட்டத்தைப் பார்க்க வெகு தொலைவில் இருந்து மக்கள் வருகிறார்கள்.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நமது கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக இருந்த நமது பாரம்பரியத்தை சுபஸ்ரீ முன்னெடுத்துச் செல்கிறார். அவரது மூலிகை தோட்டம் நமது கடந்த காலத்தை எதிர் காலத்துடன் இணைக்கிறது. அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்' என்றார்.

Tags:    

Similar News