பெற்ற தாயை தீ வைத்து கொன்ற மகன் - போலீஸ் நிலையத்தில் பரபரப்பு
- பிரச்சனைக்கு தீர்வு காண இரு தரப்பினரையும் போலீசார் வரவழைத்துள்ளனர்.
- சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்ற பழமொழிக்கு, சினத்தால் நிதானத்தை இழக்கும் ஒருவன் செய்யும் எக்காரியமும் தவறாகவே போகும் என்பது அர்த்தமாகும். இன்றைய காலத்தில் ஒருவர் மீது மற்றொருவர் கொள்ளும் கோபம் கொலை செய்யும் அளவுக்கு சென்று விடுகிறது.
அதுபோல சம்பவம் தான் உத்தரபிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. நிலம் தொடர்பான குடும்ப தகராறு ஒன்று உத்தரபிரதேச மாநிலம் அலிகரில் உள்ள கைர் போலீஸ் நிலையத்திற்கு வந்துள்ளது. மகனுக்கும், தாயுக்கும் தகராறு தொடர்பாக போலீசில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இப்பிரச்சனைக்கு தீர்வு காண இரு தரப்பினரையும் போலீசார் வரவழைத்துள்ளனர்.
அப்போது தாய் மீது மகன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். சம்பவத்தை பார்த்த போலீசார் பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் 40 சதவீத தீக்காயம் அடைந்த அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர். மேலும் பலியான பெண் ஹேமலதா என்றும் கைது செய்யப்பட்ட அவரது மகனான கவுரவுக்கு 22 வயதாகிறது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.