இந்தியா

400 கி.மீ. பயணித்து ரத்த தானம்: இளம்பெண் உயிரை காப்பாற்றிய நபருக்கு குவியும் பாராட்டு

Published On 2024-05-30 07:48 GMT   |   Update On 2024-05-30 07:48 GMT
  • இந்தூரைச் சேர்ந்த பெண்ணுக்கு சமீபத்தில் ஆபரேஷன் செய்யப்பட்டது
  • அவருக்கு ரத்த தானம் செய்ய மகாராஷ்டிரா நபர் சுமார் 400 கி.மீ. பயணம் செய்தார்.

இந்தூர்:

மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சமீபத்தில் ஆபரேஷன் செய்யப்பட்டது. அவரது ரத்த வகை 'ஓ பாசிடிவ்' எனக்கருதி ஆபரேஷன்போது ஓ பாசிடிவ் ரத்தம் செலுத்தப்பட்டது. ஆனாலும் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதுதான் அந்தப் பெண்ணுக்கு மிக அரிதான பாம்பே குரூப் ரத்த வகை இருப்பது தெரிந்தது.

இதையடுத்து, அந்தப் பெண்ணுக்கு ரத்த தானம் செய்ய மகாராஷ்டிர மாநிலம் ஷிர்டியைச் சேர்ந்த ரவீந்திர அஷ்டேகர் நண்பரின் உதவியுடன் காரில் பயணித்தார். சுமார் 400 கிலோமீட்டர் தொலைவு பயணத்துக்குப்பின் அவரது பாம்பே குரூப் ரத்தம் பெறப்பட்டு, அந்தப் பெண்ணுக்கு செலுத்தப்பட்டது.

சரியான நேரத்தில் குறிப்பிட்ட வகை ரத்தம் கிடைத்ததால் அந்தப் பெண் உயிர் தப்பினார் என டாக்டர்கள் தெரிவித்தனர். சுமார் 400 கிலோமீட்டர் பயணித்து ரத்த தானம் செய்த ரவீந்திராவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ரத்த வகைகளில், ஏ, பி, ஓ மற்றும் ஏபி ஆகிய வகைகள்தான் பெரும்பாலும் நமக்கு தெரிந்தவை. பாம்பே குரூப் என்பது மிகவும் அபூர்வமானது. இரண்டரை லட்சம் பேரில் ஒருவருக்குத்தான் இந்த ரத்த வகை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News