மணிப்பூர்: குகி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக மாஸ் ஆபரேசன்- என்.டி.ஏ. எம்.எல்.ஏ.-க்கள் தீர்மானம்
- குகி கிளர்ச்சி குழுவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கையை தொடங்க வேண்டும்.
- மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டதற்கு கண்டனம்.
மணிப்பூரில் கடந்த வாரம் ஆறு பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். குகி கிளர்ச்சிக்குழு பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்திச் சென்று 7 நாட்களில் ஆறு பேரையும் கொலை செய்தது. இதனால் மணிப்பூரில் தற்போது மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இது தொடர்பாக அமித் ஷா உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டார். மூன்று வழக்குகளை என்.ஐ.ஏ. விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
மாநில மந்திரிகள், எம்.எல்.ஏ.-க்கள் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்த நிலையில் மணிப்பூரில் பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் 27 எம்.எல்.ஏ.-க்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் குகி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை (mass operation) எடுக்கப்பட வேண்டும். குகி கிளர்ச்சிக்குழுவை சட்டவிரோத அமைப்பாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நவம்பர் 14 தேதியிட்ட உத்தரவின்படி AFSPA உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பிட்ட காலவரையறைக்குள் இந்த தீர்மானத்தில் குறிப்பிட்டவை நடைமுறை படுத்தப்படவில்லை என்றால் மணிப்பூர் மக்களுடன் ஆலோசனை நடத்தி அதன்பின் உரிய நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.
மணிப்பூரில் அமைதி மற்றும் இயல்பு நிலையை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசும் மாநில அரசும் விரைவில் எடுக்கும் அறிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன் மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த கூட்டத்தில் ஏழு எம்.எல்.ஏ.-க்கள் மருத்துவம் தொடர்பான காரணங்களை கூறி கலந்து கொள்ளவில்லை. 11 எம்.எல்.ஏ.க்கள் காரணம் ஏதும் கூறாமல் கலந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.