இந்தியா

பாரபட்சம், பிற்போக்குத்தனமானது, பாசிச மசோதா: கடும் விமர்சனத்தால் ட்வீட்டை நீக்கிய சித்தராமையா

Published On 2024-07-17 09:38 GMT   |   Update On 2024-07-17 09:38 GMT
  • தனியார் தொழில் நிறுவனங்களில் கன்னடர்களை மட்டுமே வேலைக்கு எடுக்கும் மசோதாவுக்கு ஒப்புதல்.
  • தனியார் நிறுவனங்கள் கடுமையாக விமர்சித்த நிலையில் எக்ஸ் பதிவை நீக்கிய சித்தராமையா.

கர்நாடகாவில் உள்ள அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் 'சி மற்றும் டி' கிரேடு பணிகளுக்கு முழுவதும் கன்னடர்களை மட்டுமே வேலைக்கு எடுக்கும் மசோதாவுக்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது என சித்தராமையா எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதற்கு தனியார் நிறுவனங்கள் கடுமையாக விமர்சனம் செய்திருந்தன. இந்த முடிவு பாரபட்சமானது. பிற்போக்குத்தனமானது, பாசிச மசோதா என விமர்சித்தன. இதனால் சித்தராமையா அந்த ட்வீட்டை நீக்கியுள்ளார்.

இதற்கிடையே கர்நாடக மாநில தொழில்துறை மந்திரி சந்தோஷ் லாத் "தனியார் நிறுவனத்தில் நிர்வாகம் அல்லாத பதவி (non-management roles) பணிகளில் 70 சதவீதம், நிர்வாகம் தொடர்பான பணிகளில் 50 சதவீத இடங்களும் கன்னட மக்களுக்கு வழங்கப்படும்" என விளக்கம் அளித்துள்ளார்.

இந்த மசோதா பாரபட்சமானது என தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர்கள் பலர் விமர்சித்துள்ளனர்.

மணிபால் குளோபல் எஜுகேசன் சர்வீசஸ் சேர்மன் மோகன்தாஸ் பாய் "இந்த மசோதா பாகுபாடானது. பாரபட்சமானது. இது விலங்குகள் பண்ணை 'Animal Farm' (the George Orwell novel) போன்ற பாசிச மசோதா" எனக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

பயோகான் நிர்வாகத் தலைவர் கிரண் மஜும்தார்-ஷா இந்த திட்டத்தை வரவேற்றார், ஆனால் "இந்தக் கொள்கையிலிருந்து மிகவும் திறமையான ஆட்சேர்ப்புக்கு விலக்கு அளிக்க வேணடும். தொழில்நுட்ப மையமான எங்களுக்கு திறமையான பணியாளர்கள் தேவை. உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்குவதே நோக்கமாக இருக்கும் அதே வேளையில், இந்த நடவடிக்கையால் தொழில்நுட்பத்தில் எங்களின் முன்னணி நிலையை பாதிக்கக்கூடாது" என்றார்.

Tags:    

Similar News